ETV Bharat / state

கே.டி. ராகவனைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றம்

author img

By

Published : Sep 2, 2021, 6:51 PM IST

கே.டி.ராகவனைக் கண்டித்து தீர்மானம்
கே.டி.ராகவனைக் கண்டித்து தீர்மானம்

பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவனைக் கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயற்குழு கூட்டம், சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று (செப்.2) நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கே.டி.ராகவன் குறித்து கடந்த சில நாள்களுக்கு முன் சர்ச்சை வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரலாகப் பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த குற்றச்சாட்டை மறுத்து கே.டி.ராகவன் பாஜக மாநில பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

கே.டி ராகவனை கைது செய்ய வலியுறுத்தல்

கே.டி.ராகவனை கண்டித்து கொண்டு வந்த தீர்மானத்தில், "பாஜகவில் மர்மமான முறையில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பத்திரிகைகளில் செய்தி வருவதால் தமிழ்நாடு பெண்கள் அச்சத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த இழிவான செயலில் ஈடுபட்ட கே.டி ராகவன் உடனடியாக கைது செய்யப் பட வேண்டும். தனது கட்சி பெண் நிர்வாகிகளின் பாதுகாப்பையே உறுதி செய்யத்தவறிய திராணியற்ற பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாஜகவின் பல பாலியல் சம்பவங்களுக்கு இதுவரை எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத சீமான், கே.டி ராகவனின் பாலியல் சம்பவத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்திருப்பது இருவரின் கூட்டு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்பொழுது பாலியல் சம்பவங்களின் ஒருங்கிணைப்பாளராக மாறிவிட்டார். இந்த பெண் விரோத போக்கை கடைபிடிக்கும் சீமானை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சீமானை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் சவுமியா ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கே.டி.ராகவன் விவகாரம் - டிஜிபி அலுவலகத்தில் எம்.பி ஜோதிமணி புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.