ETV Bharat / state

மத்திய படைகளை தமிழக காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? - கே.எஸ்.அழகிரி கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 3:27 PM IST

Updated : Dec 2, 2023, 5:53 PM IST

கே.ஸ்.அழகிரி கேள்வி
மத்திய காவல் படையை வைத்து தமிழக காவல்துறையை மிரட்டி பார்க்கிறார்களா

Madurai DVAC Raid: மத்திய காவல் படைகளை வைத்து தமிழகக் காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா எனச் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.ஸ்.அழகிரி பேட்டி

சென்னை: அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கிடைத்த புகாரின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் மதுரை தபால் தந்தி நகர்ப் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்திலும் சோதனைக்காக சென்றனர்.

ஆனால், இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்த போது அவர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டு அலுவலகத்திற்குள் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கோயம்புத்தூரிலிருந்து 10க்கும் மேற்பட்ட CRPF படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குப் பாதுகாப்பிற்காகச் செல்ல முயன்றனர். ஆனால், காவல் துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கேள்விக்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழகக் காவல்துறை அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் ஆதாரங்களோடு அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனைக்குச் சென்றுள்ளார்கள். இவர்களைப் பார்த்தவுடன் லஞ்சம் பெற்ற அதிகாரி ஓடிச் சென்றுள்ளார். அவர் குற்றமற்றவர் என்றால் இவர்களை எதிர்கொண்டிருக்கலாம். அவர்கள் குற்றம் செய்திருக்கிற காலத்தினால் ஓடி ஒளிகிறார். மாநிலத்தினுடைய காவல்துறை சோதனைக்கு அனுமதித்து இதனை அமலாக்கத்துறை எதிர்கொள்ள வேண்டும்.

இதனை எதிர்கொள்ளாமல் மத்திய காவல் படையை அழைத்தது தான் தவறு. மத்திய காவல் படை அங்கே வருகிறது என்றால் தமிழகக் காவல்துறையை மிரட்டிப் பார்க்கிறார்களா? இரண்டு அரசுக்கும் சம மரியாதை கொடுக்க வேண்டும். மத்திய அரசு உயர்ந்தது என்றோ மாநில அரசு தாழ்ந்தது என்றோ கிடையாது. இரண்டுமே சம அதிகாரம் பெற்றவர்கள் தான்.

உங்கள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது, அதற்கு ஆதாரமும் இருக்கிறது, ஒரு அதிகாரிக்கு எதிராகத் தான் இது செயல்படுகிறதே தவிர அமைப்பிற்கு எதிராக அல்ல. கைது செய்யப்பட்டுள்ள அதிகாரி அந்த தவறு செய்திருக்கிறார். அவர் கையில் பணம் இருக்கிறது, ஏற்கனவே ரூ20 லட்சத்தைப் பெற்றிருக்கிறார். மீண்டும் ரூ. 20 லட்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார் என்ற தகவலின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய தொடரும் சோதனை.. சிஆர்பிஎப் வீரர்களுக்கு அனுமதி மறுப்பு!

எனவே, அமலாக்கத்துறை தன்னுடைய கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு உட்பட்டு நாங்கள் விசாரணை செய்கிறோம் என்கிற போது அந்த விசாரணைக்கு எப்படி மாநிலம் கட்டுப்படுகிறதோ, அதேபோல் ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அந்த அலுவலகம் அதற்கு உடன்பட வேண்டும்.

தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிக்கலாம், ஆனால், ஓடுவதன் மூலம் அவர்கள் குற்றவாளிகள் தான் என்பதை நிரூபித்துக் கொள்கிறார்கள். அதனால், அமலாக்கத்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

இதுவரையில், அமலாக்கத்துறை பல அமைச்சர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளது. கரூரில் 30 நாளுக்கு மேலாக ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கிருந்து என்ன கைப்பற்றப்பட்டது என்பது கூடச் சொல்லவில்லை, ஆனாலும் அவர்களை அனுமதித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவர்கள் மீது ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என சொல்வது சரியானது அல்ல. இதைப் போல் செய்தால் அவர்கள் கண்டிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு, “தேர்தல் என்றால் இரு கட்சிகளுக்கிடையில் போட்டியிருக்கத் தான் செய்யும். நாங்களும் முன்னிலையில் இருக்கிறோம்.” எனப் பதிலளித்தார்.

மழை வடிகால் திட்டத்தில் ஊழல் செய்ததாக திமுகவை அதிமுக குற்றம் சாட்டுவது குறித்த கேள்விக்கு, “அதிமுகவிற்கு மற்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் தான் சாலை சாக்கடை எல்லாம் பள்ளமாகத் தெரிகிறது, திமுக நன்றாகத் தான் செய்கிறார்கள்” என் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலுக்குத் தயாராவது குறித்த கேள்விக்கு, “மற்ற மாநிலங்களில் ஆட்சி அமைத்த பிறகு பாராளுமன்ற தேர்தல் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படும்” என விளக்கமளித்தார்.

மேலும், நடிகை குஷ்பு சேரி மொழி எனக் கூறியது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து கேள்விக்குப் பதிலளித்த பட்டியலின காங்கிரஸ் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன் குமார், “அவர் ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரியாகப் பேசுவார். தந்தை பெரியார் பட்டியலின மக்களுக்காக எவ்வளவு போராடினார் என்பதை ஈவிகேஎஸ் இளங்கோவன் புரிந்து கொள்ள வேண்டும். பழைய சிநேகத்தின் அடிப்படையில் அவர் குஷ்புவிற்கு ஆதரவு தெரிவிக்கிறார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி சிக்கியது எப்படி?

Last Updated :Dec 2, 2023, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.