ETV Bharat / state

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி

author img

By

Published : Jul 12, 2022, 1:09 PM IST

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்; திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்; திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி

காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புராயன் தன்னை எதிர்த்து அதிமுக சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளரை விட 1,191 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

காஞ்சிபுரம்: மாநகராட்சியிலுள்ள 51 வார்டுகளுக்கு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது காஞ்சிபுரம் 36ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் என்பவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். இதனால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மீதமுள்ள 50 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.

36ஆவது வார்டில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல், கடந்த 9ந் தேதியன்று நடைபெற்றது. 36ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக சார்பில் சுயேச்சை, பாஜக, பாமக என 6 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டில் மொத்தம் 4ஆயிரத்து 510 வாக்காளர்கள் உள்ள நிலையில், 2 ஆயிரத்து 597 வாக்குகள் (57.58 %) மட்டும் பதிவானது.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணும் பணி, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது பதிவான 2 ஆயிரத்து 597 வாக்குகள் நான்கு சுற்றுகளாக எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிவுற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல்: திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி

இதில், திமுக வேட்பாளர் சுப்பு என்கிற சுப்புராயன் முதல் சுற்றில் 422 வாக்குகளும், இரண்டாம் சுற்றில் 479 வாக்குகளும், மூன்றாம் சுற்றில் 412 வாக்குகளும், நான்காம் சுற்றில் 446 வாக்குகளும் என 1,759 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட வேணுகோபல் என்பவர் நான்கு சுற்றுகள் முடிவில் 568 வாக்குகள் மட்டுமே பெற்றார். அவரை விட கூடுதலாக 1,191 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுப்புராயன் வெற்றி பெற்றார்.

வெற்றிப்பெற்ற சுப்புராயனுக்கு, திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவரது வெற்றியை கொண்டாடினர். காஞ்சிபுரம் மாநகராட்சி 36ஆவது வார்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமாக திமுக - 1,759 வாக்குகளும், அதிமுக -568 வாக்குகளும், பாமக - 88 வாக்குகளும், அமமுக - 78 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி -37 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சுரேஷ் - 67 வாக்குகளும், பெற்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிட்டவருக்கு ஒற்றை தலைமை விவகாரத்தால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. இதனால், சுயேச்சை சின்னமாக மகளிர் பணப்பை சின்னத்தில் அதிமுக வேட்பாளர் வேணுகோபால் போட்டியிட்டார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் மொத்தமுள்ள மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை திமுக 34, அதிமுக 8, பாமக 2, பிஜேபி 1, சுயேச்சை 6 ஆக உள்ளது.

இதையும் படிங்க: தலைமை அலுவலகத்தை கொள்ளையடித்த ஓபிஎஸ்? - ஈபிஎஸ் ஆதரவாளர் காவல் நிலையத்தில் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.