ETV Bharat / state

6ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ம.நீ.ம!.. அடுத்த நகர்வு என்ன?

author img

By

Published : Feb 26, 2023, 9:17 AM IST

Etv Bharat
Etv Bharat

ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தொடக்கம் முதல் தற்போது வரை அக்கட்சி கடந்துவந்த பாதையையும், தமிழ்நாட்டில் பிற அரசியல் கட்சிகளுக்கு இடையே அக்கட்சி ஏற்படுத்திய தாக்கத்தையும் காணலாம்.

சென்னை: கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியினைத் தொடங்கியநிலையில், அக்கட்சி 5ஆண்டுகள் முடிந்து 6ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு தற்போது முதல் முறையாக ஆதரவு அளித்துள்ளது. எனவே, மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் மற்றும் அடுத்த நகர்வு குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

6 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள ம.நீ.ம!.. அடுத்த நகர்வு என்ன?
6 ஆம் ஆண்டில் கால் எடுத்து வைத்துள்ள ம.நீ.ம!.. அடுத்த நகர்வு என்ன?

கட்சி தொடக்கமும் முதல் தேர்தலும்: நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி, மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் தொடங்கினார். மேலும் கட்சியின் கொடியையும் சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன் பிறகு, 'நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’, தமிழகம் விழித்தெழட்டும்'' என தனது டிவிட்டரில் பதிவு செய்தார்.

கமலின் டிவிட்டர் பதிவு
கமலின் டிவிட்டர் பதிவு

2018ஆம் தொடங்கிய கட்சி 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலை முதலில் சந்தித்தது. அதில் தனித்து போட்டியிட்டு கிட்டத்தட்ட 3.7 விழுக்காடு வாக்குகள் பெற்று அனைவரையும் திருப்பிப் பார்க்க வைத்தது. இதனால், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை அக்கட்சி பூர்த்திசெய்யவில்லை. அதுமட்டுமின்றி 3.7 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி 2.5 விழுக்காடாக குறைந்தது.

முதல் தேர்தலில் 3.7% வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி
முதல் தேர்தலில் 3.7% வாக்குகள் பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி

கட்சினர் தொடர் விலகல்: சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்வி எதிரொலியாக அக்கட்சியிலிருந்து முருகானந்தம், குமரவேல், மகேந்திரன், பத்மபிரியா, சந்தோஷ்பாபு உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருந்த 15 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதுமட்டுமின்றி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளை செயற்குழு உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகிக்கொண்டனர். இது மக்கள் நீதி மய்யத்திற்கு பெரிய அடியாக இருந்தது.

தொடர் விலகல் தொடர்பாக பேசிய கமல்ஹாசன், "இப்போது துரோகிகள் நம்மை விட்டு விலகிவிட்டனர்" எனத் தெரிவித்து இருந்தார். மேலும், மக்கள் நீதி மய்யம் 2.0 என்று கூறி புதிய நிர்வாகிகளை நியமித்தார். பல்வேறு மாற்றங்களை சந்தித்தும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சொல்லும்படியான வாக்குகளை அக்கட்சி பெற முடியவில்லை. 'Parachute Politics' செய்தால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது பலர் குற்றச்சாட்டு வைத்தனர்.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்: இது ஒருபுறம் இருக்க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 2021 தேர்தலில் கிட்டத்தட்ட 11,000 வாக்குகளை பெற்று இருந்தது. இந்த வாக்குகள் தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அத்தொகுதியில் வெற்றிபெற விடாமல் வைத்தது. இதனால், இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவு

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ம.நீ.ம ஆதரவை நாடியது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளருக்கு "மக்கள் நீதி மய்யம் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து இப்போது சொல்ல முடியாது" என்றும் ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன் அறிவித்துவிட்டார். இந்த அறிவிப்பால் கமல்ஹாசன் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. மேலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை மக்கள் நீதி மய்யம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

6ஆம் ஆண்டு: இதற்கு இடையில் பல்வேறு விமர்சனம், குற்றச்சாட்டுகள், மாற்றங்கள் என அனைத்தும் சந்தித்து கடந்த 21ஆம் தேதி 5 ஆண்டுகள் முடிந்து 6ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தது, மக்கள் நீதி மய்யம். "கட்சியின் வளர்ச்சிப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் இந்த ஆண்டு முழு கவனம் செலுத்த இருக்கிறோம்'' என ஆறாம் ஆண்டு துவக்க விழாவின்போது துணைத் தலைவர் மௌரியா தெரிவித்திருந்தார்.

நல்ல நடிகர்; ஆனால், அரசியல்வாதி இல்லை: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார் பேசிய போது, "மக்கள் நீதி மய்யம் 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது. இது அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முதல் படி என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அடுத்த தேர்தலில் 1 அல்லது 2 தொகுதிகளை பெற்றுக்கொண்டு அப்படியே சென்று விடவும் வாய்ப்புள்ளது. எப்பொழுதும் திமுகவிற்கு எதிராகவும் மற்றும் நியூட்ரல் (Netrual) வாக்குகள் 15% இருக்கும். அதுதான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றது.

அப்படி தான் தேமுதிகவும் முதல் தேர்தலில் கிட்டத்தட்ட 10% வாக்குகளைப் பெற்றது. 2021 தேர்தல் பெரிய அளவில் கமல்ஹாசனுக்கு கைகொடுக்கவில்லை. எனவே, அடுத்த தேர்தலில் அவர் திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு அதிகம். கமல்ஹாசன் நல்ல நடிகர். ஆனால் அரசியல்வாதி இல்லை" எனத் தெரிவித்தார்.

மய்யத்தின் சித்தாந்தம்: மய்யம் என்பது எந்த நேரத்தில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தான் மய்யத்தின் சித்தாந்தம். மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்ப எங்கள் நகர்வுகள் இருக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர் சினேகா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், "கட்சி தொடங்கியதில் இருந்து மய்யம் என்ற இலக்கை நோக்கித்தான் மக்கள் நீதி மய்யம் சென்று கொண்டு இருக்கிறது. பல விஷயங்களுக்கு மக்களுக்காக குரல் கொடுத்து இருக்கிறோம். கரோனா காலத்தில் கூட ஜூம் செயலி மூலம் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு என்ன வேண்டுமோ? அதைச் செய்து இருக்கிறோம். தற்போது மக்கள் நலனுக்காக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறோம். ஏனென்றால், மதச்சார்பு அரசியல் இந்தியாவிற்குள் வரக்கூடாது என்பதற்காகத் தான் ஆதரவு தெரிவித்தோம்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் - அக்கட்சியின் மாநில செயலாளர் சினேகா மோகன்தாஸ்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் - அக்கட்சியின் மாநில செயலாளர் சினேகா மோகன்தாஸ்

திமுக உடன் கூட்டணி வைக்கவேண்டும் என்றால், 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்து 25 தொகுதிகளைப் பெற்று 25 எம்.எல்.ஏ-க்கள் இருந்து இருப்பார்கள். மய்யம் என்பது எந்த நேரத்தில் யாருக்கு ஆதரவு தருவது என்பது தான். இதுதான் மய்யத்தின் சித்தாந்தம். பல ஆண்டுகளாக இருக்கிற கட்சிக்கு நடுவில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கியதை பாசிட்டிவாக தான் பார்க்கிறோம்.

மக்கள் நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்ப எங்கள் நகர்வுகள் இருக்கும். அடுத்த அமாவாசைக்கு கட்சி இருக்காது என்று தெரிவித்தவர்கள் வாயால் அவருடைய ஆதரவு கேட்டுக்கொண்டு வருகின்றனர். ஆகவே, வரும் காலங்களில் ஒரு மாற்றத்தைக் காணலாம்" எனத் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் மற்றும் நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்துக்கள்
கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் கூறிய வாழ்த்து

இதையும் படிங்க: எம்.பி., சீட்டுக்கு காய் நகர்த்தும் கமல் - டிடிவி தினகரன் சாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.