ETV Bharat / state

கலாஷேத்திராவில் பாலியல் புகார் - உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் ஆணையத்தலைவி உறுதி!

author img

By

Published : Mar 31, 2023, 7:53 PM IST

Etv Bharat
Etv Bharat

கலாஷேத்திரா கலை கல்லூரியில் எழுந்திருக்கும் பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ். குமரி தெரிவித்துள்ளார்.

சென்னை: திருவான்மியூரில் அமைந்துள்ள கலாஷேத்திரா அறக்கட்டளை ருக்மணி தேவி கலைக்கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் நடப்பதாக கூறி கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக மாணவ மாணவிகள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின்கீழ், கலாஷேத்திரா ருக்மணி தேவி கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியின் முன்னாள் இயக்குநர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தருமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல் துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் பாலியல் தொந்தரவுகளுக்குள்ளானதாக கூறப்பட்ட மாணவி, தனது பெயரையும் கல்லூரியின் பெயரையும் கெடுப்பதற்காக வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் கல்லூரியில் நடக்கவில்லை என்று கல்லூரி நிர்வாகமும் திட்டவட்டமாக மறுத்தது. இதனால், தமிழ்நாடு காவல் துறையினருக்கு அளித்த உத்தரவை வாபஸ் பெற்ற தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை முடித்து வைத்தது. இதனால், எங்களுக்கு நீதி வேண்டும் என்று 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லாரி வாளகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போக்கை அறிந்த கல்லூரி முதல்வர், ஏப்ரல் 6ஆம் தேதி வரை கல்லூரியை மூடவும், மாணவிகள் இரண்டு நாட்களில் விடுதியில் இருந்து வெளியேறவும் உத்தரவிட்டார்.

மேலும் மாணவ, மாணவிகள் தேர்வை ஆன்லைனில் எழுதிக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி வரை தேர்வு இருக்கும் நிலையில் இதை ஏற்க முடியாது என மாணவிகள் மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளிடம் விசாரிக்கும் போது, "14 ஆண்டுகளாக இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கல்லூரியிலேயே மூடி மறைக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னர் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை கைவிட்ட பிறகு மீண்டும் கல்லூரியை திறக்கின்றனர். எங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பேராசிரியர், உதவியாளர்கள் ஆகியோர் மீது கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இவர்களை கல்லூரி நிர்வாகம் காப்பாற்ற முயல்வது வேதனை அளிக்கிறது" எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய மாணவ, மாணவிகள், "கல்லூரி இயக்குநர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுகுறித்து, எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுங்கள் என்று கேட்டதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இதனால் இன்றும் (மார்ச் 31) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது தொடர்பாக மாணவ மாணவிகள் இணந்து குழு ஒன்று அமைத்து மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலமாகப் புகார் அளித்துள்ளோம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தனர்.

மாணவ மாணவிகளின் தொடர் போராட்டம் காரணமாக பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் இன்று (மார்ச் 31) நடைபெற்ற சட்டப்பேரவையில் இது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கலாஷேத்திரா கல்லூரி மாணவிகளின் போராட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். காவல் துறைக்கு இதுவரை எந்த எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. கலாஷேத்திரா பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ். குமரி
தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ். குமரி

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவி ஏ.எஸ்.குமரி, தாமாக முன்வந்து கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.எஸ். குமரி, "கலாஷேத்திராவில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் இருந்ததாக புகார் அளித்துள்ளனர். 12 பேரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினேன். அதில், நான்கு பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு தந்துள்ளனர். அவர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். எழுத்துப்பூர்வமாக மாணவிகள் புகார் எழுதிக் கொடுத்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளிடம் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக ஒப்புக்கொண்டனர். இந்த அறிக்கையை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி அரசிடம் ஒப்படைக்க இருக்கிறோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஓடும் காரில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஆண் நண்பருடன் பூங்காவுக்கு சென்றபோது நேர்ந்த கொடூரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.