மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள்

author img

By

Published : Sep 28, 2022, 11:58 AM IST

மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள் - மூதாட்டிகளிடம் தொடர் கைவரிசை

இந்தியா முழுவதும் தங்களை போலீஸ் எனக்கூறி மூதாட்டிகளை குறிவைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து வரும் ஈரானிய கும்பல் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீ லதா(68). இவர் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி சாஸ்திரி நகர் மெயின் ரோடு சந்திப்பு அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று நபர்கள் மூதாட்டியிடம், தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த பகுதியில் கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், உடனடியாக தங்க நகைகளை கழற்றி பாதுகாப்பாக பைக்குள் வைக்குமாறும் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அருகில் இருந்த மற்றொரு நபர் தனது நகைகளை கழற்றி பைக்குள் வைத்ததை பார்த்த மூதாட்டி, தனது 8 சவரன் தாலிச்செயின் மற்றும் தங்க வளையல்களை கழட்டி உள்ளார்.

மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள் - மூதாட்டிகளிடம் தொடர் கைவரிசை - போலீசார் விசாரணை
மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்கள் - மூதாட்டிகளிடம் தொடர் கைவரிசை - போலீசார் விசாரணை

பின்னர் மூதாட்டிக்கு அந்த நபர்கள் உதவுவதுபோல நடித்து கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு, வெறும் காகிதத்தை மட்டும் மூதாட்டியின் பைக்குள் வைத்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கடந்து சென்ற மூதாட்டி பையை திறந்து பார்த்தபோது, அதில் வெறும் பேப்பர் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்தொடர்ந்த காவல்துறை: உடனடியாக இதுகுறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் தனிப்படை காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக அந்த நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் எண் மூலம் விசாரணை நடத்தியபோது, அந்த பதிவு எண்கள் போலியானது என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நபர்கள் செல்வதை பின்தொடர்ந்து காவலர்கள் சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலம் எல்லை வரை சென்று கொள்ளையர்கள் மறைந்துள்ளனர். பின்னர் கொள்ளையனின் சட்டை அடையாளத்தை வைத்து காவலர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்களின் சிசிடிவி பதிவுகள்
தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்களின் சிசிடிவி பதிவுகள்

அப்போது கொள்ளையடித்த நபர்கள் ஆந்திர எல்லையில் இருசக்கர வாகனத்தில் இருந்து காரில் தப்பிச் செல்வது தெரிய வந்துள்ளது. எனவே சுமார் 200க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை காவல்துறையினர், மூன்று மாதங்களாக தேடி ஆந்திரா மாநிலம் பில்லேரு டவுனில் பதுங்கி இருந்த இம்தியாஸ் (30) என்பவரை கைது செய்தனர்.

கொள்ளையர்களின் மதிநுட்பம்: இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய கும்பல் ஈரானிய கொள்ளையர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்ட இவர்கள், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பெங்களூரு உள்பட இந்தியா முழுவதும் குழுக்களாக பிரிந்து சென்று மூதாட்டியை மட்டுமே குறி வைத்து இதுபோன்ற பாணியில் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நுழைந்த ஈரானிய கொள்ளையர்களின் சிசிடிவி பதிவுகள்

ஈரானிய கொள்ளை கும்பலின் தலைவரான பாகர் என்பவருடன் இம்தியாஸ் உட்பட 5 நபர்கள் சென்னைக்கு வந்து மூதாட்டியிடம், தங்களை போலீஸ் எனக்கூறி கைவரிசை காட்டியுள்ளனர். அதேநேரம் கொள்ளையடிக்கும் இவர்கள், ஆந்திர மாநில எல்லை வரை இருசக்கர வாகனத்தில் சென்று, பின்னர் கார்களில் மாறி தப்பித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை, கோவில்பட்டி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் உள்ள மூதாட்டிகளிடம் கொள்ளையடித்துள்ளனர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பில்லூர், குண்டக்கல் ஆகிய பகுதிகளில் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இது போன்ற கொள்ளையில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சொகுசு வாழ்க்கை: இந்த கொள்ளை கும்பல் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ, அந்த மாநிலத்தின் நம்பர் பிளேட்டுகளை போலியாக தயாரித்து அதை பொருத்திக்கொண்டு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சென்று திரும்பி வருகின்றனர்.

இவ்வாறு இந்த ஈரானிய கொள்ளையர்கள் ஒரு நாளைக்கு சுமார் பத்துக்கும் மேற்பட்ட சவரனை மூதாட்டிகளிடம் கொள்ளையடித்து, அதை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று விற்று, தனி நபருக்கு 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பிரித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இம்தியாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வருகை: மேலும் இந்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் அம்பிவெளி, கர்நாடக மாநிலம் பிதர் ஆகிய இடங்களில் வசிக்கும் ஈரானிய கொள்ளையர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து அடிக்கடி மூதாட்டியை குறிவைத்து கொலை நடக்கிறது, கலவரம் நடக்கிறது நகைகளை கழட்டி வைக்குமாறு கூறி கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்து விட்டு விமானத்தில் தங்கள் சொந்த மாநிலத்திற்கு தப்பிச் சென்று வந்தனர்.

ஆனால், தமிழ்நாடு காவல்துறையினரின் தொடர் கைது நடவடிக்கைகளால் சமீப காலமாக ஈரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டிற்குள் வராமல் இருந்தனர். ஆனால் தற்போது ஆந்திராவைச் சேர்ந்த ஈரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்து கைவரிசை காட்ட தொடங்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை வேண்டுகோள்: பொதுமக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி பைக்குள் வைக்குமாறு எந்த ஒரு காவல்துறையினரும் சொல்வது கிடையாது. கலவரம் நடக்கிறது, கொலை நடக்கிறது தங்க நகைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் கும்பலிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது போன்ற சந்தேக நபர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனே காவல் உதவி செயலி அல்லது 100,112 என்ற அவசர அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய கர்நாடக இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.