நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய கர்நாடக இளைஞர்

author img

By

Published : Sep 28, 2022, 10:31 AM IST

இந்தியாவின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கிய கர்நாடக இளைஞர்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹூப்ளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கியை உருவாக்கியுள்ளார்.

ஹூப்ளி: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அங்குஷ் கொரவி, ஹூப்ளியில் உள்ள கேஎல்இ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பிஇ படித்துள்ளார். இவர் இங்கு இறுதியாண்டு படிக்கும்போதே, தனது துப்பாக்கிகள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். இதற்காக ஆஸ்டர் டிபென்ஸ் பிரைவட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

இங்கு அரசின் முறையான அனுமதியுடன் தனது ஆராய்ச்சியைத் தொடங்கிய கொரவி, இதுவரை தனது சொந்த முயற்சியில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இருப்பினும் நாட்டின் ராணுவம், ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குத் தேவையான அதிநவீன துப்பாக்கிகளை தயாரித்துக் கொடுப்பதே தனது இலக்காகக் கொண்டிருந்தார்.

தற்போது அது நிறைவேற உள்ளது. இவ்வாறு இவர் தயாரித்த முதல் உள்நாட்டு துப்பாக்கி நாட்டின் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக வர உள்ளது. இந்த துப்பாக்கி தயாரிப்பிற்காக எந்தவொரு உதிரி பாகங்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. முழுக்க முழுக்க இந்தியாவில் உள்ள பொருட்களைக் கொண்டே இத்துப்பாக்கி தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்த துப்பாக்கியில் இரண்டு வகையான குண்டுகளை தயாரித்துள்ளார். அதில் 9*19 மிமீ கொண்ட குண்டுகள் ராணுவத்திற்காகவும், 0.32 மிமீ அளவுள்ள குண்டுகள் துப்பாக்கி பயன்பாட்டு உரிமம் பெற்றவர்களுக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கி
நாட்டின் முதல் உள்நாட்டு துப்பாக்கி

இதுகுறித்து ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் மேஜர் சி.எஸ்.ஆனந்த் கூறுகையில், “ஆயுதங்கள் என்று வரும்போது ஒரு இளைஞரால் பாதுகாப்புத்துறை சார்ந்த பொருட்களை எளிதில் தயாரிக்க முடியாது. இதில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும் எந்த நிலையிலும் தளர்வு அடையாமல், தன் துணிச்சலால் இந்த நிலையை அவர் (கொரவி) எட்டியுள்ளார்.

இது இப்போதைக்கு முன்மாதிரியாக செய்யப்பட்டுள்ளது. அரசும், சம்பந்தப்பட்ட அலுவலர்களும் பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, இதனை தயார் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்” என்றார்.

இதையும் படிங்க: எதிர்காலத்தில் அனைத்து வகையான செல்போன்களுக்கும் ஒரே சார்ஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.