ETV Bharat / state

ஆபத்துகள் நிறைந்த அணுசக்தி பசுமை ஆற்றலா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

author img

By

Published : Nov 19, 2022, 7:03 AM IST

ஆபத்துகள் நிறைந்த அணுசக்தி பசுமை ஆற்றலா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்
ஆபத்துகள் நிறைந்த அணுசக்தி பசுமை ஆற்றலா? பூவுலகின் நண்பர்கள் கண்டனம்

ஆபத்துகள் நிறைந்த அணுசக்தியை பசுமையான ஆற்றல் என இந்தியா கூறுவதா என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை: அதிக செலவுமிக்க ஆபத்துகள் நிறைந்த அணுசக்தியை பசுமையான ஆற்றல் என இந்திய அரசு கூறுவதற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்து நாட்டின் ஷார்ம் –எல் –ஷேக்கில் 2022 நவம்பர் 6 தொடங்கி 18 வரை நடைபெறும் CoP 27 மாநாட்டின் இந்தியக் குழுவிற்கு தலைமையேற்று சென்றுள்ள ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள நீண்ட கால உத்தியை கடந்த 14ம் தேதி சமர்ப்பித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் 2022ம் ஆண்டிற்குள் தங்களது குறைந்த அளவு கரியமிலவாயு வெளியேற்றத்திற்கான நீண்ட கால உத்தியை சமர்ப்பித்திருக்க வேண்டும். இதுவரை இந்தியா உட்பட 57 நாடுகள் மட்டுமே இந்த உத்தியை சமர்ப்பித்துள்ளன என தெரிவித்துள்ளது.

உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல், குறிப்பாக பெட்ரோலில் எத்தனாலை கலத்தல், மின்சார வாகன பரவலாக்கலை அதிகரிக்கும் இயக்கம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை அதிகரித்தல், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், 2025 வாக்கில் எத்தனால் கலப்பை 20 சதவீதம் அளவை எட்டுதல்.

மேலும், பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை பொதுபோக்குவரத்திற்கு மாற்றுவதற்கான வலுவான நடைமுறை, காலநிலையை தாக்குப்பிடிக்கவல்ல மேம்பாட்டிற்கு பொலிவுறு நகர முன்முயற்சிகள், விரிவடைந்த எரிசக்தி மற்றும் ஆதார வளங்கள் பயன்பாட்டை மேற்கொள்ளும் மைய நீரோட்டத்திற்காக நகரங்களின் ஒருங்கிணைந்த திட்டமிடல், தீவிரமான பசுமை கட்டட விதிகள், திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மையில் புதிய, விரைவான வளர்ச்சியை உருவாக்குதல் போன்றவை இந்தியா சமர்ப்பித்துள்ள செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களாகும்.

இந்த பட்டியலில் அணுசக்தியும் இடம் பெற்றிருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தியா சமர்ப்பித்துள்ள செயல்திட்டத்தில் அணுசக்தியைப் பற்றி குறிப்பிடுகையில் “இந்தியா அணுசக்தியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் முக்கியக் கூறாக கருதுவதாகவும், தொடர்ந்து இது தொடர்பாக ஆராய்ச்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் இந்தியா மேற்கொள்ளும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2032 வாக்கில் அணுசக்தித் திறனை மூன்று மடங்கு அதிகரித்தல் மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கென மேற்கொள்ளப்பட்ட சில மைல்கற்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

அணு உலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நடைமுறையில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லை என்பதால் அணுசக்தியை ஒரு பசுமையான ஆற்றலாக ஏற்றுக்கொள்ள முடியாது. அணு ஆற்றல் நமது சுற்றுச்சூழலிலும் மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் மிகப்பெரும் தாக்குதலை நிகழ்த்துகிறது. அதனால், அணு ஆற்றல் காலநிலை மாற்ற விளைவுகளை குறைக்கும் கருவி என்பது தவறான வாதம் என சுட்டிக்காட்டியுள்ளது.

ஆனால் அணுக்கழிவு என்பது அணுவுலையிலிருந்து மின்சாரம் உற்பத்தியான பின்னர் வெளிவரும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளானது பல நூறாயிரம் ஆண்டுகள் நமது சுற்றத்திலேயேதான் இருக்கும். அணுக்கழிவுகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது சுற்றுச்சூழலில் தவிர்க்க இயலாத, ஒழித்துக்கட்ட இயலாத ஒன்று என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது அணுசக்தி உற்பத்தியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நிலையில் இந்த நாகசார திட்டங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் திணிக்கப்படுகிறது. குஜராத்தில் அம்மாநில முதலமைச்சரே புதிய அணுவுலைக்கு எதிராக பேசியுள்ளார். கர்நாடகாவில் மாநில பா.ஜ.க. அம்மாநிலத்தில் எங்கும் அணுக்கழிவுகளை புதைக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கிறது.

ஆனால், அணுசக்திக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாட்டில் மட்டும் புதிய அணுவுலைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பையும் மீறி குறுக்கு வழியில் கூடங்குளத்தில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைப்பதற்கு தேசிய அணுமின் சக்திக் கழகம் முயன்று வருகிறது.

மேலும், அண்மையில் வெளியான மைக்கேல் ஸ்னைடர் எனப்படும் தனியார் அணுசக்திக் கொள்கை ஆய்வாளர் குழுவின் World Nuclear Industry Status Report 2022 (WNISR )ன் படி 2009 முதல் 2021 இடைப்பட்ட காலத்தில் சூரிய ஆற்றலின் விலை 90 விழுக்காடாகவும் காற்றாலை ஆற்றலின் விலை 72 விழுக்காடாவும் குறைந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் புதிய அணுமின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை 36 விழுக்காடு உயர்ந்துள்ளது என தெரிய வருகிறது.

இதையும் படிங்க: நான் முதல்வன் திட்டம்: 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.