ETV Bharat / state

சென்னை ஐஐடி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் ஆன்லைனில் வெளியீடு!

author img

By

Published : May 4, 2022, 8:02 PM IST

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியின் முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஆன்லைன் வளைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை: இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கும் உயர்தரமான கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை ஐஐடி ஒரு முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை கட்டணமின்றி கிடைக்கச் செய்யும் வகையில், பாடப்பிரிவுகளை வழங்கும் முன்முயற்சியை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஆர்வமுடைய எவரும் அணுகும் வகையில் முக்கிய படிப்புகளைக் கொண்ட வலைதளப்பிரிவை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தியாவின் கிராமப் பகுதிகளுக்கும் உயர்தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இந்த முன்முயற்சி முக்கிய பங்கு வகிக்கும்.

புரோகிராமிங் (Programming), டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் (Data Structures), கம்ப்யூட்டர் ஆர்கனைசேஷன் (Computer Organisation), அல்காரிதம் (Algorithms) ஆகிய முக்கிய கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் http://nsm.iitm.ac.in/cse/ என்ற வளைதளப்பக்கத்தில் காணமுடியும். கரோனா தொற்றுநோய் காலத்தில் சென்னை ஐஐடி மாணவர்களுக்காக ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் நடத்தப்பட்ட நேரடி விரிவுரைகளை யூடியூப்-பிலும் பார்க்க முடியும்.

இது குறித்து கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் சந்திரசேகர் கூறும்போது, "இளங்கலை மற்றும் பட்டதாரி நிலைகளில் உள்ள மாணவர்களுக்காக இத்துறையின் ஆசிரியர்கள் நடத்திய சிஎஸ்இ முக்கிய பாடப்பிரிவுகளின் நேரடி விரிவுரைகளின் பதிவுகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் போர்ட்டல் : இந்த பாடத் திட்டங்களைப் பற்றிய அடிப்படைக் கருத்துகள் மற்றும் கொள்கைகளை சரியான முறையில் கற்றுணர முடியும். கணினி அறிவியல், பொறியியல் ஆகிய துறைகளில் முக்கியமாகவும், அடிப்படையாகவும் விளங்கும் பாடங்களை எவ்வாறு திறம்பட கற்பிப்பது, சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன்களை மாணவர்களிடையே எவ்வாறு மேம்படுத்துவது போன்றவை பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சிஎஸ்இ முக்கிய பாடங்களைக் கற்பித்தல் மற்றும் கற்றல் தரத்தை மேம்படுத்த பயன்படும்.

இந்தியாவில், குறிப்பாக ஐஐடிகளில் மிகவும் விரும்பப்படும் பொறியியல் துறைகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முக்கியமான ஒன்றாகும். மாணவர்களும் அதிகளவில் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஐஐடியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சேர எண்ணற்ற மாணவர்கள் விண்ணப்பித்தாலும், இத்துறையில் குறைந்த அளவிலேயே மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது.

சென்னை ஐஐடியில் படிக்க முடியாத மாணவர்கள், குறிப்பாக தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கற்பிக்கப்படும் தரமான பாடத் தொகுப்புகள் கிடைக்கும் என்பதை இந்த முன்முயற்சி உறுதிசெய்யும். இதர கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் பயனடைவார்கள்.

மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த ஏதுவாக, நேரடி பயிற்சி அமர்வுகளை நடத்த மூத்த மாணவர்களை ஈடுபடுத்தவும் இத்துறை திட்டமிட்டுள்ளது. வரும்காலத்தில் சிறந்த மதிப்பீட்டிற்காக வெவ்வேறு விதமான கேள்வி-பதில்களை உருவாக்க கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் - தேர்வுத்துறை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.