ETV Bharat / state

அச்சுறுத்தும் புயல்: துறைமுகத்தில் 'எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவது யாருக்காக?..அவை எதை உணர்த்துகின்றன?..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 1:11 PM IST

The Meaning of Warning Cages for Alert of Cyclone in Tamil
புயல் எச்சரிக்கை கூண்டுகள் பற்றிய குறியீடுகளை எப்படி தெரிந்து கொள்வது?

Cyclone Warning Cages Alert in Tamil: பொதுவாக புயல் ஏற்படும் காலங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளதாக செய்திகளில் பார்த்திருப்போம். அவை எதை குறிக்கிறது..எதற்காக ஏற்றப்படுகிறது என்பது குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னையில் இருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த மிக்ஜாம் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மிக்ஜாம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5 ஆம் தேதி மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பொதுவாக புயல் ஏற்படும் காலங்களில் கடலோரம் உள்ள துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும்.

'3 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, 5 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது' என தொலைக்காட்சி செய்திகளின் மூலம் நாம் பார்த்திருப்போம். ஆனால் அது என்ன..? யாருக்காக..? என்பது பற்றி நாம் பெரிதாக யோசித்திருக்க மாட்டோம். இதனை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக மிக்ஜாம் புயல் ஏற்பட்டுள்ள இந்த காலத்தில் புயல் கூண்டுகளின் பொருள் குறித்து அறிந்துகொள்வோம்.

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன ?

புயலின் நிலவரம் குறித்த அறிந்து கொள்ள எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒன்றாம் எண்ணில் இருந்து 11 ஆம் எண் வரை உள்ள இந்த எச்சரிக்கை கூண்டுகள் பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளை கொண்டு ஏற்றப்படும். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படும்.

எதற்காக, யாருக்காக எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது ?

புயல் எச்சரிக்கை கூண்டு என்பது மீனவர்களுக்கு புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் ஏற்றப்படும். புயல் காலங்களில் கடலில் பயணிக்கும் மீனவர்களுக்கும், துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அவர்களது கப்பல்களை பாதுகாப்பதற்கும் இந்த கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இவை ஏற்றப்படும். ஒரு புயல் உருவானது முதல் உச்சகட்ட எச்சரிக்கை வரை ஏற்படக்கூடிய நிலைகளை மீனவர்களுக்கு அறிவிக்க இந்த கூண்டுகள் ஏற்றப்படுகின்றன.

இந்த குறியீடுகளுக்கு என்ன பொருள் ?

1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: இந்த கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கும். மேலும் இதனால், துறைமுகங்கள் ஏதும் பாதிக்கப்படாது. ஆனால், பலமான காற்று வீசும் என புரிந்து கொள்ள வேண்டும்.

1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்க இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது.

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலை ஏற்பட்டுள்ளதால், துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதை குறிக்க மூன்றாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது. இவை உள்ளூருக்கான முன்னறிவிப்பு.

3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: துறைமுகமானது புயல் அச்சுறுத்தலுக்கு உட்படலாம். ஆனால், மிக அதிகமான தீங்கை ஏற்படுத்தாது என்பதை இது. மேலும், இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்று உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுவதை குறிக்கும்.

5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது பொருள். மேலும், இக்காலத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் எனவும் பொருள்.

இதையும் படிங்க: புயல் எதிரொலி: சென்னையில் 7 விமானங்கள் சேவை ரத்து... எந்தெந்த விமானம் தெரியுமா?

6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் எனவும், இதனால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உள்ளாகும் என்பதையும் அறிவிக்க ஆறாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது.

7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் இந்த துறைமுகம் வழியாகவோ அல்லது இதற்கு அருகிலோ கரையை கடக்கலாம் எனும் எச்சரிக்கையை குறிக்க ஏழாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது.

The Meaning of Warning Cages for Alert of Cyclone in Tamil
9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

8 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் வலுப்பெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ? உருவாகியுள்ளது எனவும் வலுப்பெற்ற இந்த புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் எனவும் குறிப்பதற்காக, எட்டாம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது. மேலும் இந்த கடும் புயலால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதையும் குறிக்கும்.

9 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: புயல் வலுப்பெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ? உருவாகியுள்ளது எனவும் வலுப்பெற்ற இந்த புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் எனவும் குறிப்பதற்காக, ஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்படும். மேலும் இந்த கடும் புயல் துறைமுகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் குறிக்கும்.

10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: அதிதீவிரமாக உருவாகியுள்ள புயல் துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும் என்பதை குறிக்கும். அப்படி கடக்கும்போது, துறைமுகத்துக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடுகிறது.

11 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: உச்சகட்ட எச்சரிக்கையை குறிக்கும் வகையில் இந்த கூண்டு ஏற்றப்படுகிறது. உருவாகியுள்ள அதிதீவிர புயலால் வானிலை மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது; மேலும், இந்த புயலால் பெரும் சேதம் ஏற்படும் என்பதையும் குறிக்கும்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்: சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்க கூடாது - விமான நிலைய இயக்குநர் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.