ETV Bharat / state

ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார் - உதயநிதி ஸ்டாலின் சாடல்

author img

By

Published : Aug 14, 2023, 6:56 PM IST

TN NEET Exam Death: தமிழ்நாடு ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார், அவர் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை என அமைச்சர் உதயநிதி கூறினார்

Etv Bharat
Etv Bharat

உதயநிதி

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் ஜெகதீஸ்வரன் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகன் இறந்து போன துக்கம் தாங்காமல் நேற்று நள்ளிரவு அவரது தந்தை செல்வசேகரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து வெளியே எடுத்துவரப்பட்ட செல்வ சேகரின் உடலுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வால் தொடர்ந்து பல்வேறு மாணவச் செல்வங்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். தனது மருத்துவ கனவு பறிபோனதால் சகோதரர் ஜெகதீஷ்வரன் தற்கொலை செய்து கொண்டார்.

இதுவரை மாணவர்களை தான் பறிகொடுத்து இருந்தோம் தற்போது மாணவச் செல்வங்களைச் சேர்ந்த குடும்பங்களையும் பறிகொடுத்து கொண்டிருக்கிறோம். செல்வ சேகரன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு தெம்பு கிடையாது. ஒவ்வொரு வருடமும் இந்த நீட் தேர்வால் மாணவர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

நான் அரசியல் பேச விரும்பவில்லை இருந்தாலும் தயவு செய்து தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன நிலையை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். ஒரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார் மறுமுறை டெல்லிக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் வேறு வழி இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். விரைவில் அதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் வேண்டுகோளின்படி தயவு செய்து யாரும் இது போன்ற தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். விரைவில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். மீண்டும் ஒன்றிய பாஜக அரசிடம் நான் கேட்டுக் கொள்வது இந்த நீட் தேர்விலிருந்து தயவு செய்து தமிழ்நாட்டிற்கு விளக்கு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆளுநர் பேசும் போதே பலி கொடுத்து இருக்கிறோம். ஆளுநர் மாளிகையில் மாணவர் பெற்றோரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் ஆளுநர் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ரவி வேறு உலகத்தில் இருக்கிறார். அவர் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சுத்தமாக புரிந்து கொள்ளவில்லை. நான்கு ஐந்து வருடங்களில் 20 உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆளுநர் அதை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் அழுத்தத்தின் பேரில் மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டார். ஒன்றிய பாஜக அரசு தான் இதற்கு சரியான முடிவை எடுக்க வேண்டும்.

ஆளுநர் பேசியதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா திமுக தானே எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நேரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை, யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை திமுக நீட் தேர்வு கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறது. நான் பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் அதை தான் சொன்னேன்.

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு, இல்லையென்றால் எல்லோரும் தெருவுக்கு வந்து போராட வேண்டியதுதான் அப்படி போராடினால் திமுக மாணவர்கள் பக்கம் நிற்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்தெந்த மாநிலங்களில் கல்விக்கு உரிமை கொடுக்கப்படும் என்று ராகுல் காந்தி ஏற்கனவே கூறியிருந்தார்.

கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருந்து நீட்டை ரத்து செய்வோம் என்றும் தெரிவித்து இருந்தார். ஒவ்வொரு மாநிலத்திற்கு என்ன தேவையோ அதை செய்து கொடுப்போம் என்று சொன்னார். கண்டிப்பாக விரைவில் ஒரு நல்ல மாற்றம் வரும் மாணவர்கள் தயவு செய்து தப்பான முடிவுகளை எடுக்காதீர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

இனி ஆளுநருக்கு ரோலே கிடையாது, இனி ஜனாதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும். அவர் இங்கு உட்கார்ந்து கொண்டு கோச்சிங் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை கொஞ்சம் கூட அறியாமல் வேறு ஒரு உலகத்தில் ஆளுநர் உள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் சொல்ல கூடாதா? அப்போது பெற்றோர்களுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள் நீட் தேர்வை கொண்டு வந்தது யாரு அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். கலைஞர் இருந்த வரை நீட் தேர்வு கிடையாது. ஜெயலலிதா அம்மையார் இருந்த போது இருந்ததா இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை. தயவு செய்து இந்த மரணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒன்றிய பாஜகவிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வது தயவு செய்து நீட் தேர்தலில் இருந்து விலக்கு கொடுங்கள்” என்று வலியுறுத்தினர்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் பேட்டி கொடுத்த பின்னர் காரில் ஏறும் போது பலியான ஜெகதீஸ்வரன் நண்பர் ஃபயாஸ் ”எத்தனை ஜெகதீஷ் எத்தனை அனிதாவை நாங்கள் இழக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இதே கோரிக்கைகள் தான், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு எதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகள்? நாங்கள் எதற்கு பன்னிரண்டாவது படிக்கிறோம் என்றே தெரியவில்லை” என உதயநிதியிடம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விமானங்களின் மீது லேசர் ஒளி - சென்னை விமான நிலைய அதிகாரிகள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.