ETV Bharat / state

"அரசுத்துறைகளின் காலிப் பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிடுக" - ஓபிஎஸ்

author img

By

Published : Dec 26, 2022, 7:20 PM IST

OPS_
OPS_

அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திமுக அரசு நிரப்பிய பணியிடங்கள் குறித்தும் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டதைத் தொடர்ந்து, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு அட்டவணை அமையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, 2023ஆம் ஆண்டிற்கான அரசுப் பணித் தேர்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை சம்மந்தமே இல்லாமல் உள்ளது. அதாவது, 'அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்ற வாக்குறுதி குறித்து கேள்வி கேட்டால், தனியார் நிறுவனங்களில் 1,063 முகாம்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசைப் பொறுத்தவரையில் அரசுத் துறைகளிலும், கல்வி நிலையங்களிலும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதுதான் அதன் முதல் கடமை. அதைத்தான் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைச் செய்யாமல், தனியார் நிறுவனங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறுவது அரசின் திறமையின்மையை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது.

மேலும், எத்தனை காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன? என்பது குறித்தோ அல்லது எத்தனை காலிப் பணியிடங்களுக்கு அறிவிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன? என்பது குறித்தோ தெளிவானத் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இதுபோன்ற தகவலை அரசு செய்தி வெளியீட்டில் தெரிவிக்காததிலிருந்தே, சொல்லிக் கொள்ளும் அளவுக்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெளிவாகிறது.

நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் காலிப் பணியிடங்களை நிரப்பாததற்கு ஒரு காரணம் என்று அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் சிறு எண்ணிக்கையிலான காலிப் பணியிடங்களுக்கு தடையாக இருக்கலாமே தவிர, அதிக எண்ணிக்கையைக் கொண்ட குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ போன்ற பணியிடங்களுக்கு எவ்விதமான தடையும் இல்லை என்றே நான் கருதுகிறேன். எனவே, நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைக் காரணம் காட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

ஜெயலலிதா அவர்கள், கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2 லட்சம் நபர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நிலைமை தலைகீழாக உள்ளது. இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலேயே, மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்புவோம் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், அதில் பத்து விழுக்காட்டைக்கூட ஒன்றரை ஆண்டு காலத்தில் நிரப்பாதது; நிரப்ப நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கும் செயலாகும்.

அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அவற்றை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற உண்மை நிலையை மறைக்க, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க அரசு சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒரு சப்பைக்கட்டு அறிக்கை. காலிப் பணியிடங்களை நிரப்ப மேல்நடவடிக்கை எடுக்காமல், பூசி மொழுகுவது போன்று ஒரு செய்திக் குறிப்பினை அரசு சார்பில் வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செய்தி வெளியீடு, அரசு தன் முடிவிலிருந்து மாறவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. ஒரு வேளை இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை போலும்!

இதில் முதலமைச்சர் கவனம் செலுத்தி எத்தனை அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன? என்பது குறித்தும்; தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எத்தனை காலிப் பணியிடங்கள் அரசு முகமைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன? என்பது குறித்தும்; நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதன் காரணமாக எத்தனைப் பணியிடங்களை நிரப்ப இயலாத சூழ்நிலை உள்ளது? என்பது குறித்தும்; வரும் ஆண்டுகளில் உத்தேசமாக எத்தனைப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன? என்பது குறித்தும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:TRB தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.