ETV Bharat / state

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் இலக்கை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை! - green gram procurement issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 18, 2024, 4:26 PM IST

Green gram procurement: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில், கொள்முதல் இலக்கை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Photo Of Green Gram Procurement
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடர்பான புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதல் செய்வது தொடர்பான வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு விவசாயிகளின் விளைபொருட்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ-நாம்) மூலம் மறைமுக ஏல முறையிலும், பார்ம் டிரேடிங் எனப்படும் விவசாயிகளின் இருப்பிடத்திற்குச் சென்றும் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடப்பு ராபி பருவத்தில் பச்சைப்பயறு கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம், பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.85.58-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

தனியார் வியாபாரிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.72 முதல் ரூ.75 வரை மட்டுமே கொள்முதல் செய்யும் நிலையில், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10-க்கு மேல் கூடுதல் விலை கிடைப்பதால், இங்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதில் விவசாயிகள் தங்களின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை ஆகியவற்றை முன்பதிவு செய்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை, இந்த விற்பனைக் கூடத்தில் 345 விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், சுமார் 100 விவசாயிகளிடம் மட்டுமே பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஏப்ரல் 1ஆம் தேதியே தொடங்க வேண்டிய கொள்முதல், விற்பனைக் கூடத்தின் கட்டுமானப் பணிகள் காரணமாக 45 நாட்கள் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. நாங்கள் விளைவித்த பச்சைப்பயிரை வீடுகளில் வைத்து பத்திரமாக பாதுகாத்து தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மிகவும் கவலை அளிக்கிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவில் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 900 மெட்ரிக் டன்னாக இருந்த கொள்முதல், நிகழாண்டுக்கு 400 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஏக்கருக்கு நாங்கள் 6 மூட்டை பச்சைப்பயிறு அறுவடை செய்கிறோம். ஆனால், இங்கு சிட்டா அடங்கல் பெற்றுக்கொண்டு ஒரு ஏக்கருக்கு 110 கிலோ மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள்.

இதனால், எங்கள் பச்சைப்பயிறை வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கொள்முதல் இலக்கை மத்திய, மாநில அரசு உயர்த்தி அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஒரு ஏக்கருக்கான கொள்முதல் அளவையும் அதிகரித்து அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போலீசார் மீது பெண் சிஐஎஸ்எப் வீரர் பரபரப்பு புகார்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.