ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்; போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 1:17 PM IST

for-4th-day-equal-work-equal-pay-ssta-is-on-hunger-strike-in-chennai
“சம வேலைக்கு” “சம ஊதியம்” போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை...

Secondary Teachers Protest: சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

“சம வேலைக்கு” “சம ஊதியம்” போராட்டக் குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை...

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து 4வது நாளாக கொளுத்தும் வெயிலிலும் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா இன்று (அக்.1) பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வெயிலின் கொடுமை தாங்காமல் வயது முதிர்வு காரணமாக 230க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 13 பேர் போராட்டக் களத்திலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி 311-ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதே இவர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளது. 2023 ஜனவரி 9ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டைக் களைவதற்கான குழுவை அமைத்து, அதன் அடிப்படையில், அறிக்கையைப் பெற்று மூன்று மாதத்தில் ஊதிய முரண்பாடு களையப்படும் என 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது அறிவித்திருந்தார். ஆனால், அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 25ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எந்தவித சமரச முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311-இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 1.6.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, 1.6.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும், அதன் பின்னர், நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும் “ஒரே பணி” “ஒரே கல்வித் தகுதி” என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனை சரி செய்ய வேண்டுமென போராட்டம் நடத்திய பொழுது, அப்போது, எதிர்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311-இல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கப்படும் எனக் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் செவிலியர்கள் விடிய விடிய போராட்டம் - இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, தமிழக முதல்வர் 1.1.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும்போது, கல்வித்துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம்.

எங்களின் ஒற்றை கோரிக்கையும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் கைக்குழந்தைகளுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, சுமார் 230க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் துணைச் செயலாளர் ஞானசேகரன் கூறும்போது, “திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311 நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக இருக்கிறது. அரசு பேச்சுவார்த்தைக்குக் குழு அமைத்து 3 மாதங்களில் நிறைவேற்றப்படும் எனக் கூறினர்.

ஆனால், நிறைவேற்றவில்லை. எங்களின் கோரிக்கையை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்றி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்த்து வருகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லாஉஷா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி விவசாயிகள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.