ETV Bharat / state

சப்ஸ்கிரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.. ரூ.18 லட்சம் மோசடி - 5 பேர் சிக்கியது எப்படி?

author img

By

Published : Aug 13, 2023, 10:38 AM IST

Online fraud case
ஆன்லைன் மோசடி வழக்கு

சென்னையில் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் (fake online part time jobs) என கூறி 18 லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை: சென்னை முகப்பேரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மோசடி தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நாக்ரி, லிங்க்டு இன் (Naukri, Linkedin) போன்ற இணையதளத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், அப்போது வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக விளம்பரம் ஒன்று வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதில் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக கூகுள் பக்கத்தில் ஆய்வு செய்தபோது, சப்ஸ்க்ரைப் செய்தால் பணம் கிடைக்கும் என போடப்பட்டிருந்ததால் நம்பி முதலில் லிங்கை க்ளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்ததாக தெரிவித்தார்.

உடனே வாடஸ் அப் எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அனுஷ்யா என்பவர், 150 ரூபாய் வங்கிக் கணக்கில் அவர் செலுத்துவார் என கூறியுள்ளார். பின் அனுஷ்யா 150 ரூபாய் அனுப்பிய பிறகு, தொடர்ந்து பணம் சம்பாதிக்க டெலிகிராம் குரூப் ஒன்றில் இணைத்ததாக கூறியுள்ளார்.

அதில் சப்ஸ்க்ரைப் செய்ய யூடியூப் லிங்குகள் பெற பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளதாகவும், அதன் அடிப்படையில் 1,000 ரூபாய் செலுத்தி 1,300 ரூபாயும், பின் 5,000 ரூபாய் செலுத்தி 6,500 ரூபாயும் சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார். 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி தொடர்ந்து பணம் சம்பாதிக்க நினைத்ததாகவும், இதே போல 18 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் வரை செலுத்திய பின் பணம் திரும்ப கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த நபர் ஏற்கனவே தொடர்பு கொண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கும், டெலிகிராம் எண்ணிற்கும் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அறிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளதாக கூறியுள்ளார். எனவே, தான் ஏமாந்த 18 லட்சம் பணத்தை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் மூலமாக வேலை தேடும் நபர்களை குறி வைத்து வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு, பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதன முறையில் சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்வது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்: "தைரியமாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்"- முதலமைச்சர் ஸ்டாலின்!

இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட நபர் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, மோசடி நபர் சென்னை ஐசிஎப் பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மறைந்து இருந்த நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த டார்லா பிரவீன் குமார், அண்ணா நகர் கிழக்கைச் சேர்ந்த ராஜு, அசோக் குமார், வீரராகவன், பிரவீன் குமார் ஆகிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெளிநாட்டில் இருக்கும் மோசடி நபர்களுக்கு வங்கிக் கணக்கை தொடங்கிக் கொடுத்து, மோசடி செய்யப்பட்ட பணத்தை மலேசியாவில் உள்ள மோசடி கும்பலுக்கு பரிமாற்றம் செய்வதை இவர்கள் வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அதில் இவர்களுக்கு 50,000 ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் கொடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 7 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப்பை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த 10 லட்சம் ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர். இவர்கள் மீது ஏற்கனவே மும்பை இஸ்லாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுவரையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆன்லைனில் பகுதி நேர வேலை தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற எண்ணை அணுகுமாறும். ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்குமாறு பொதுமக்களை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அபார வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு 1.10 கோடி பரிசு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.