ETV Bharat / state

Madras Day 2023: எங்க ஊரு மெட்ராசு.. சென்னை மாநகரம் வளர்ந்து வந்த பாதை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2023, 10:37 PM IST

Etv Bharat
Etv Bharat

Madras Day Celebration: 384வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் வரலாறு குறித்தும், அதன் சிறப்பு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..

சென்னை: கோயம்பேடு-னா பஸ், தி.நகர்-னா டிரஸ், சேப்பாக்கம்-னா-ஸ்டேடியம், மயிலாப்பூர் சங்கீதம், பிராட்வே-கட்டடங்கள், மெரினா பீச், கிண்டி பூங்கா, அண்ணா நூலகம் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு இடங்கள் சிறப்பை கொண்டு ஒற்றை நகரமாக 300 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வருகிறது, நமது 'சென்னை' சிட்டி.

சென்னைக்கு இன்று வயது 384. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்’ (Madras Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் தமிழகத்தின் பிற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் சென்னைக்கு என்று எப்போதும் ஒரு தனித்துவமான நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்று முதலாம் உலகப் போர் முதல் உலகப் விளையாட்டு போட்டிகள் வரை என்று தான் சொல்ல முடியும். சோழர், பல்லவர் காலத்தில் இருந்து தொடங்கி, விஜயநகரப் பேரரசுகளின் ஆட்சிக் காலத்திலும் அவர்களை அடுத்து வந்த பிரிட்டிஷ் கிழக்கு இந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் சென்னை நகரம் எப்போதும் ஒரு ஆட்சி அதிகாரத்தின் மையமாக இருந்தது. இது மட்டுமின்றி ஒரு வியாபர தளமாகவும், பிறரின் வாழ்வியல் தளமாகவும் இருந்து வருகின்றது.

சென்னையின் வரலாற்றில் வடசென்னை: சென்னையின் வரலாறு என்று அனைவரும் பார்ப்பது, சென்னையின் வழிப்பாட்டு தளங்களும், சென்னையின் பாரம்பரிய கட்டடங்களும், சிலைகளும், பாலங்களும், வானுயர்ந்த கட்டடங்களும், அதில் பறவைகளாய் இருக்கும் சென்னை வாசிகளும் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால், சென்னையின் வரலாறு எங்கு இருப்பது கேட்டால் மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி, புனித ஜார்ஜ்கோட்டை பகுதிக்கு தெற்கே இருக்கும் தென்சென்னை பகுதியைப் பற்றித்தான் பெரும்பாலனோர் பேசுவர். ஆனால், சென்னையின் பூர்வகுடிகளும், சென்னையின் உழைக்கும் மக்கள் இருக்கும் இடமான வட சென்னை, எப்போதும், தனி சென்னையாக தான் பார்க்கப்படுகிறது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று மூன்று விதமாக சென்னையைப் பிரிக்கலாம். ஆனால், சென்னையின் தனித்துவமான வட்டார மொழி, பிறப்பெடுத்த இடம், மக்களின் சில கலாசாரம், மக்களின் வாழ்வியல் நெறி என்று பலவகைப்படுத்தப்படுவதாக வட சென்னை பார்க்கபடுகிறது. தென் சென்னை, மத்திய சென்னை எப்போதும், இடம் பெயர்ந்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும், இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை உள்ளடக்கியது என்றும் கூட கூறலாம். தனக்கென்று தனித்துவமாக இருக்கும் சென்னையின் சிறப்பம்சங்கள் இவைபோல பலவகையில் உள்ளது.

மெட்ராஸ் டூ சென்னை: 1746 ஆம் ஆண்டில் புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இப்பகுதிகள் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதன்பின், சென்னை நகரம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டதோடு, இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் ரயில் மார்க்கமாக சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின் சென்னை, அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' எனப் பெயர் மாறுதலுக்கு உள்ளானது.

சென்னை என்று பெயர் மாறுதலுக்கு உள்ளாவதற்கு முன்பு சென்னைக்கு அன்று தனிப்பெயர் இருந்துவந்தது. சென்னப்பட்டினம், பட்டினம், மதராஸப்பட்டினம் என்று பல்வேறு மக்களால் கூறப்பட்டது. மேலும், சென்னையின் அல்லது மெட்ராஸ் பெயர் காரணம் ஆயிரம் ஆயிரம் கதைகள் வந்துக் கொண்டிருந்தாலும், சரியான வரலாறு என்பது இதுவரை தெளிவாக இல்லை. ஆனால், 'பட்டினம்' என்ற சொல் இருக்கலாம் என்று பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், கடலை ஒற்றிய பகுதிகளுக்கு 'பட்டனம்' என்றும் 'பாக்கம்' என்றும் சொற்கள் இருந்து வருகிறன.

எதிலும் முதலிடத்தைப் பிடிக்கும் சென்னை: பெண்களுக்கான முதல் மருத்துவமனையான ரெயினி மருத்துவமனை, முதல் பெண் விமான ஓட்டி உஷா சுந்தரம், இந்தியாவின் முதல் வங்கி ஆளநர் க்ரிபோர்ட் அவர்களால் 1682-ல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான். அவ்வளவு ஏன், இந்தியாவை முழுவதும் அளவு எடுக்கும் பணியும், சென்னை பரங்கிமலையில்தான் தொடங்கியது. முதன்முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவந்தது, சென்னை மாநகராட்சி தான். உலக மக்களால் அனைவரும் விரும்பும் அசைவ உணவான சிக்கன் 65, சென்னை அண்ணா சாலையில் இருக்கும் புஹாரி ஓட்டலில்தான் முதன்முதலில் செய்யப்பட்டது. இப்படி பல்வேறு விஷயங்களின் சென்னைதான் அதாவது, அன்றைய 'மெட்ராஸ்தான் முன்னோடி'யாக இருந்தது. தற்போது சென்னை அதன் வளர்ச்சியின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.

சென்னையின் பரிமாண வளர்ச்சி: மெட்ராஸில் இருந்து, 'சென்னை' என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சென்னை பல்வேறு வளர்ச்சிகள் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, சென்னை சிங்கார சென்னையாக பிறப்பெடுத்து, அடுத்தடுத்து வளர்ச்சிகளுக்கு சென்னை நகரம் சென்று கொண்டிருக்கிறது. பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், பூங்காக்கள், புதிய மேம்பாலங்கள் எனப் பல வளர்ச்சிகள் அடைந்தன.

அதேபோல், சென்னை மாநகராட்சியின் பரப்பளவும் விரிந்துக்கொண்டே சென்றது. தற்போது 'சிங்கார சென்னை 2.0' மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிகள் செய்து வருகிறது. குறிப்பாக பூங்காவை சீரமைத்தல், குளங்கள், ஏரிகள், பாலங்களில் தொங்கும் தோட்டம், நடைபாதை சீரமைத்தல், மேலும் சைக்கிளுக்கு என்று முக்கிய வீதிகளில், தனி பாதைகள், சாலை விளக்குகள் என்று பல்வேறு வகையில் இத்திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

வளர்ச்சியை நோக்கி நம்ம சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் ஆய்வு நடத்தியும், பாலங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA), மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மாநில அரசு துறைகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன. மேலும் ஐடி பூங்காக்கள், தொழிற்சாலைகள், அந்நியநாட்டின் முதலீடு கொண்டு பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து வருகின்றன.

சென்னை தினம் வாழ்த்துகள்: சுனாமி, வர்தா புயல், ஆண்டுதோறும் பெரும்மழைகள், பெரு வெள்ளங்கள் என எத்தனையே இயற்கை சீற்றங்களையும், கரோனா போன்ற பெருந்தொற்று என அனைத்தையும் தாண்டி சென்னை மீண்டுக்கொண்டே வருகிறது. மேலும், உலக தரத்தில் தன்னை வளர்த்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தன்னுள் உள்ளடக்கிக் கொண்ட இந்த சென்னை மாநகரை, தங்களோடு கலந்துகொண்ட உயிராக எண்ணிக்கொண்டு தான் இந்த கொண்டாடத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அனைவருக்கும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சென்னை தினம் வாழ்த்துகள்.

இதையும் படிங்க: சாலைகளில் முடங்கிக் கிடக்கும் சென்னையின் அடையாளம்.. சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.. மெட்ராஸ் டே சிறப்பு தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.