ETV Bharat / state

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: 118 பேரை களப்பணிக்கு இறக்கிய ஓபிஎஸ்.. சென்னையில் அவசர ஆலோசனை!

author img

By

Published : Jan 28, 2023, 6:20 PM IST

ஓபிஎஸ்  தரப்பு
ஓபிஎஸ் தரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஓபிஎஸ் தலைமையிலான அணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பு தீவிர ஆலோசனை.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தேர்தல் களம் காணுகிறது. வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடும் நிலையில் தேர்தல் பணிகளில் திமுக கூட்டணி கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பு இழுபறியில் நீடிக்கிறது. அதிமுக நிலவி வரும் ஒற்றைத் தலைமை விவகாரம், அதனால் ஈபிஎஸ், ஒபிஎஸ் இரு பிரிவுகளாக பிரிந்து தனித்தனியாக போட்டி உள்ளதாக அறிவித்துள்ளதால் அக்கட்சியில் தொடர் இழுபரி நீடித்து வருகிறது.

அதிமுக ஈபிஎஸ் அணியில் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் தீர்ப்புக்காக இரு தரப்பினரும் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இடைத்தேர்தல் நெருங்குவதால் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்பிற்கு ஒதுக்குவதற்கு இடைக்கால உத்தரவு பிறபிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பினர் முறையீட்டு உள்ளனர். அடுத்த வாரம் பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு அல்லது ஈபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான மனுவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தல் தொடர்பாகவும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்தும் ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஈபிஎஸ் தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவுடுபொடியாக்கவும், பாஜகவின் நிலைப்பாடு அறிந்து, இரட்டை இலை சின்னத்தை பெற உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, "பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவர்களது வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவோம் என ஏற்கனவே ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். பாஜக போட்டியிடாத பட்சத்தில் ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை அறிவிப்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் பணி மேற்கொள்ள 118 பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதால் பாஜக போட்டியிட்டால் சரியாக இருக்கும். ஈபிஎஸ் அணியினர் தேர்தல் பணிகளை ஆரம்பித்திருக்கலாம், ஆனால் ஓபிஎஸ்க்கு எப்படி செம்மையாக ஆரம்பிப்பது என தெரியும். இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிகளவில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்க்கு தான் கிடைக்கும்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், "பொதுக்குழு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்னை பொறுத்த வரையில் ஈபிஎஸ் அணியினர் கேட்டிருக்கும் நிவாரணம் இந்த வழக்கிற்கு பொருந்தாது. எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ததால் இரட்டை இலைக்கு கையொப்பமிடும் ஒரே உரிமை ஓபிஎஸ்க்கு தான் உள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் சங்கமம் - தேர்தல் ஆலோசனை தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.