ETV Bharat / state

"மக்களுக்குத் தேவையான மருந்துகளை திமுக அரசு வழங்காமல் உள்ளது" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 2:21 PM IST

EPS condemnation of the DMK: ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்த பின்பும், தற்போது வரை மக்களுக்குத் தேவையான மருந்துகளை வழங்காமல் உள்ளது விடியா திமுக அரசு என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

EPS Statement
இபிஎஸ் அறிக்கை

சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைப்படும் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மொத்தமாக வாங்கி, மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தாமதமின்றி நேரடியாக வழங்கி, அம்மருந்துகள் நோயாளிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தை (Tamil Nadu Medical Services Corporation Ltd.,) 1994-இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

அவரது ஆட்சிக் காலத்தில் இதற்கென தனியாக 2 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இந்நிறுவனம் 2011 முதல் 2021 வரை மிகச் சிறப்பாக செயல்பட்டது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தன.

ஆனால், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு, உள்ளூர் கொள்முதல் (Local Purchse) மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது.

இதனால், மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துகள் வாங்க நாளை வருங்கள், அடுத்த வாரம் வாருங்கள் என்று அலைக்கழிப்பதால் ஏழை, எளிய நோயாளிகள் பலமுறை பயணச் செலவு செய்து, மருத்துவமனைகளுக்கு வந்தும் மருந்து வாங்க முடியாமல் அவதிப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பல ஏழை, எளிய நோயாளிகள் பேருந்து போக்குவரத்து செலவுக்குக் கூட பணம் இல்லாமல், அவர்களது இருப்பிடங்களில் இருந்து வெயிலிலும், மழையிலும் நடைபயணமாகவே வருவதாகவும் கூறப்படுகிறது. விளம்பர மோகத்தில் சுற்றித் திரியும் முதலமைச்சரும், இத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரும், யார் எப்படி போனால் நமக்கென்ன, நமக்கு நம்ம சுயநலம்தான் முக்கியம்.

பொதுமக்களிடம் தங்களது ஒவ்வொரு அசைவையும் விளம்பரப்படுத்தி, எப்படி 2021 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் விளம்பரம் மூலம் வெற்றி பெற்றோமோ, அதுபோல், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடன் செயல்பட்டதால்தான் 23.7.2023 அன்று மதுரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஒரு எதிர்கால தமிழகத்தை கட்டமைக்க இருந்த 20 வயது பொறியியல் மாணவரை நாம் இழந்திருக்கிறோம்.

எனது தலைமையிலான அரசு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவப் பணியாளர் என நியமித்து அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் துவக்கியது. இதன் மூலம், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவ நோய்களுக்கு எளிதாக சிகிச்சை பெற்றனர். ஆனால், விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக தமிழக மக்களுக்கு சேவை செய்து வந்த அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்தியது.

பின்னர் அந்த பெயரை மாற்றி 'நகர்ப்புற மருந்தகம்' என்ற பெயரில், வெறும் 700 மருந்தகங்களை, நகர்ப்புறப் பகுதிகளில் மட்டும் துவக்கியுள்ளது. இதனால், கிராமப் பகுதிகளில் வாழும் மக்களை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கும் நகரங்களை நோக்கி அலையவிட்டதுதான் இந்த விடியா திமுக அரசின் சாதனை. எனது தலைமையிலான ஆட்சியில் செயல்படுத்திய வலி நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு சிகிச்சை (Pain and Palliative care) மற்றும் என்.சி.டி. (NCD) அதாவது, தொற்று நோய்கள் கண்டறிதல் திட்டத்தை பெயர் மாற்றி 'மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது, விடியா திமுக அரசு.

இதன் மூலம் ஒரிரு முறை மட்டுமே நோயாளிகளுக்கு நேரடியாக மருந்துகள் வழங்கப்பட்டன. தற்போது அனைத்து மருந்துகளும் நோயாளிகளுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை. தகுதி வாய்ந்த மருத்துவர்கள் பலர் இருந்தும், 1.11.2023 முதல் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகவே இருப்பது, அரசு மருத்துவர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தகுதி மற்றும் திறமையின்படி நியமிக்க வேண்டிய இப்பதவி, ஏன் இன்னும் நிரப்பப்படவில்லை என்பதற்கு விடியா திமுக அரசின் முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் தமிழக மக்களுக்கு, குறிப்பாக மருத்துவ சமுதாயத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆவர். இரு நாட்களுக்கு முன்பு சென்னை மாநகர ஆணையாளர், அடிபட்ட தனது உதவியாளர் ராமன் என்பவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக, 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய சென்னை மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது அங்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையில், தனியார் மருத்துவமனையில் தனது உதவியாளருக்கு மருத்துவம் பார்த்துள்ளார். மேலும், அவரை மேல்சிகிச்சைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்ப அவசர கட்டுப்பாட்டு அறை மூலம் ஆம்புலன்ஸை அழைத்தும், மிகுந்த காலதாமதத்திற்குப் பின்னர் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டிற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது.

இந்த விடியா திமுக ஆட்சியில் பல ஆண்டுகளாக துறையின் உயர் அதிகாரியாக இருந்த அவரது உதவியாளருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரம்பூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் ஆய்வுக்காகச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அரசு மருத்துவர்கள் இல்லாததால், விபத்தில் காயமடைந்த நோயாளி பல மணி நேரம் காயத்துடன் அவதியுற்றதையடுத்து, விஜயபாஸ்கர், தான் ஒரு மருத்துவர் என்ற முறையில் விபத்தில் காயமடைந்தவருக்கு முதலுதவி அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிகழ்வும் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது.

அதேபோல், தீபாவளி அன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் வெடி விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாமல், மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்த நிகழ்வும் ஊடகங்களில் வெளி வந்துள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சியிலும், எனது தலைமையிலான அரசிலும், தமிழக சுகாதாரத் துறை முதன்மை துறையாகத் திகழ்ந்தது.

எங்களது ஆட்சியில் மத்திய அரசிடம் இருந்து பல்வேறு விருதுகளைப் பெற்ற அதே தமிழக சுகாதாரத் துறை, இன்றைய விடியா திமுக ஆட்சியில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள துறையாக மாறியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த மருத்துவர்கள், தற்போது மனம் வெதும்பி உள்ளனர். தற்போதைய காட்டாட்சி தர்பார் நடத்தும் விடியா திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில், சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்து விட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

இந்த கையாலாகாத ஆட்சியாளர்களுக்கு வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவது உறுதி. இனியாவது அரசு மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், கட்டுப்பாட்டு அறை ஆகியவை முழுமையாக இயங்கவும், காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பவும், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் உடனடியாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை வழங்கிட வேண்டும்.

கிராமப் பகுதிகளிலும் அரசு கிளினிக்குகளை திறந்திட வேண்டும். இந்திய மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளியில் களைகட்டி வந்த மல்லிகை விலை சற்று குறைவு.. 1 கிலோ மதுரை மல்லி எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.