ETV Bharat / state

வேண்டுமென்றே பழைய வீடியோக்களை பாஜவினர் சித்தரித்து பரப்புகின்றனர் - தயாநிதி மாறன் வருத்தம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:27 PM IST

சர்ச்சை கருத்து குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட எம்பி தயாநிதி மாறன்
சர்ச்சை கருத்து குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட எம்பி தயாநிதி மாறன்

Dayanidhi Maran: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் இந்தி மொழி குறித்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், இந்த சர்ச்சைகள் குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

சென்னை: மத்திய சென்னையின் திமுக எம்பி தயாநிதி மாறன், கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் "ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள், இந்தி மட்டும் தெரிந்த பீகார், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்று கொண்டு கட்டுமானப் பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

சர்ச்சை கருத்து குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட எம்பி தயாநிதி மாறன்
சர்ச்சை கருத்து குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட எம்பி தயாநிதி மாறன்

தயாநிதி மாறனின் இந்த பேச்சு, இந்தி பேசும் பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி, இந்தியா கூட்டணியில் (INDIA ALLIANCE) உள்ள கட்சிகளை டேக் செய்து பதிவிட்டு வந்தனர்.

இதனையடுத்து திமுக இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் உள்ள இந்தி பேசும் மாநிலத் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் இந்திய கூட்டணித் தலைவர்களும் தயாநிதி மாறனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில், எம்பி தயாநிதியிடம், திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசும் பழைய வீடியோக்கள் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தயாநிதி மாறன் ஒரு பழமொழியை கோடிட்டு பதில் அளித்து இருந்தார். அதில் "வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பார்களாம்" என்ற பழமொழியை கூறியிருந்தார்.

இந்த பழமொழிக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளும், கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. தொழில் ரீதியாக அல்லது மொழி ரீதியாக ஒருவரை இழிவுபடுத்துவதை மட்டுமே திமுக எம்பியான தயாநிதிமாறன் தொடர்ந்து செய்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், வெளிவந்த சர்ச்சை கருத்துகளுக்கு வருத்தம் தெரிவித்து எம்பி தயாநிதி மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பல்வேறு செயல்பாடுகளில் பாஜகவினுடைய தகவல் தொழில்நுட்ப அணியினர் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக எதிர்கட்சியினர் பேசுகின்ற பழைய வீடியோக்களை, அவர்கள் விரும்பும்படி சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்த வீடியோக்களின் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

எந்த ஒரு காலத்திலும் ஒரு தனிநபரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ காயப்படுத்தும் எண்ணம் எனக்கு எப்பொழுதும் இருந்தது கிடையாது என்பதை இந்த நேரத்தில் பணிவோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அப்படி ஒரு வேளை நான் கூறிய கருத்துக்கள் யாரையாவது காயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தால், அதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.