ETV Bharat / state

"இன்சூரன்ஸ் முதிர்ச்சி.. உடனே பணம் செலுத்துங்கள்" என பல லட்சம் மோசடி: பலே கில்லாடி சிக்கியது எப்படி?

author img

By

Published : Aug 1, 2023, 10:19 AM IST

money cheating case in Chennai
காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து பேசுவதாகக் கூறி மோசடி

போலியான டெலிகாலர் நிறுவனம் அமைத்து, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து பேசுவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஸ்ரீ வத்ஷன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ஸ்ரீ வத்ஷன் பெயரில் உள்ள லைஃப் இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி ரூ.60 ஆயிரம் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் பிரிவில் புகாரளித்தார்.

இதேபோல கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் ஐசிஐசிஐ இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுவதாகவும், அவரது இன்சூரன்ஸ் முதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அத்தொகையை பெற சேவை கட்டணமாக 51 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக தியாகராய நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், பணப்பரிவர்த்தனை அனைத்தும் யுபிஐ பரிவர்த்தனை மூலம் நடைபெற்று உள்ளதும், மோசடி செய்த பணம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள இந்தியன் வங்கி கிளை கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

மேலும் தொடர்பு கொண்ட செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்ததில் அந்த அழைப்புகள் அனைத்தும் ஒரே பகுதியில் இருந்து, அதாவது சென்னை துரைப்பாக்கம் பகுதியில் இருந்து அழைக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்து உள்ளனர். அதன்படி சென்னை பெரும்பாக்கம் சேரன் நகரைச் சேர்ந்த முகமது ஜாவீத் என்ற பட்டதாரி இளைஞரை சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

துரைப்பாக்கம் பகுதியில் ட்ரீம் கேர் சொல்யூஷன் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலியான டெலிகாலர் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார் முகமது ஜாவீத். அதன்மூலம் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விவரங்களை சட்ட விரோதமாக பெற்று அவர்களை அழைத்து காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும் எனவும், முதிர்ச்சி அடைந்த காப்பீட்டு தொகை பெற ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனவும் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இன்னும் எத்தனை பேரிடம் இது போன்ற மோசடி நடந்து உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், சைபர் கிரைம் போலீசார் கைது செய்யப்பட்ட முகமது ஜாவீத்திடம் இருந்து லேப்டாப், 12 வயர்லெஸ் போன், மூன்று செல்போன்கள், சிம்கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து 2 வங்கி கணக்குகளையும் முடக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீக்குண்டத்தில் தவறி விழுந்த குழந்தை... தந்தையின் நேர்த்திக்கடனால் நேர்ந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.