ETV Bharat / state

ஹிஜாவு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த கல்லூரி மாணவி தற்கொலை!

author img

By

Published : Apr 3, 2023, 4:09 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னையில் ஹிஜாவு நிறுவனத்தை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பாரிமுனை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் மகாலட்சுமி. தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹிஜாவூ நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பங்குத் தொகை கிடைக்கும் என்று எண்ணி இவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் இவரது தாயார் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று, அதனை கோவிந்தராஜுலு என்பவரிடம் முதலீடு செய்துள்ளார்.

ஆனால், ஹிஜாவு நிறுவனம் மோசடி செய்துவிட்டு தற்சமயம் அதன் நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளதால் பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கல்லூரி மாணவியும் தனது நண்பர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்சமயம் பணம் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்பதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ( ஏப்.02 ) தனது அறையில் மாணவி மகாலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த மாணவியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே இந்த ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் தற்போது கல்லூரி மாணவியும் உயிரிழந்துள்ளார்.

இதனால், முதலீடு செய்தவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கட்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரள ரயில் தாக்குதலில் தீவிரவாத தலையீடா? தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டமா? போலீஸ் கையில் சிக்கிய ரெட் டைரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.