ETV Bharat / state

கோயம்பேடு வளாகத்தில் டெண்டரில் மோசடி செய்த அதிகாரி கைது!

author img

By

Published : Aug 2, 2023, 9:01 PM IST

Etv Bharat
Etv Bharat

கோயம்பேடு வளாகத்தில் உணவகமாக பதிவு செய்யவேண்டிய இடத்தை, காய்கறி கடைகளாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கண்காணிப்பு பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: கோயம்பேட்டில் மொத்த மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் பல உள்ளன. குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பூ மற்றும் உணவு தானியங்களுக்கு என தனித்தனியாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிஎம்டிஏ (CMDA) அதிகாரிகள் இந்த கடைகளை டெண்டர் அறிவித்து, அதன் மூலம் கடைகளை ஒதுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானியங்கள் கடைகளில் விற்பனையாகாத கடைகளை ஏலம் விடுவதற்கான டெண்டர் சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் மூலம் அறிவிக்கப்பட்டது.

அப்போது சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளராக இருந்த சீனிவாச ராவ் என்பவரின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், சிஎம்டிஏ தலைமைச் செயற்பொறியாளர் பெரியார் என்பவரால், காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள VH-83 எண் கொண்ட கடையை, செந்தில்குமார் என்பவருக்கு 18 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த டெண்டர் ஒதுக்கீட்டின் அடிப்படையில், 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அண்ணா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணையில், உணவகம் ஆக பதிவு செய்வதற்குப் பதிலாக காய்கறி கடையாகப் பதிவு செய்தது அம்பலமானது.

காய்கறி கடையாக மாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த ஒரு கடையை 11 சிறுகடைகளாக பிரித்து மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக கோயம்பேடு மொத்த மார்க்கெட் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யும்பொழுது சதுர அடி 23 ஆயிரத்து 750 ரூபாய் முதல் 26 ஆயிரத்து 250 ரூபாய் சதுர அடிக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

அதாவது 3,5,22,450 ரூபாய்க்கு டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், இந்த மோசடி செயலால் அரசுக்கு 86 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய் இழப்பீடு ஏற்படும் வகையில் செந்தில் என்பவருக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட சிஎம்டிஏ கண்காணிப்பு பொறியாளர் ஸ்ரீனிவாச ராவ் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும் அருகில் இருக்கும் வியாபாரிகள் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியதாகவும், அதன்மூலம் காய்கறி கடையாக நடத்தி வந்த கடைகளை மீண்டும் உணவகமாக நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக மோசடி செய்து பதிவு செய்து, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்ட காரணத்தினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சீனிவாச ராவ் கண்காணிப்பு பொறியாளராக இருந்த காலகட்டத்தில், கடை ஒதுக்கீடு எவ்வளவு நடைபெற்றது என்றும், அதில் எத்தனை கடைகள் மோசடியாக ஒதுக்கப்பட்டது என்பது குறித்தும் விரிவான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிக்கினால் ரூ.500 கோடி அபராதம் - நாளை தாக்கலாகிறது டிஜிட்டல் தரவு பாதுகாப்பு மசோதா..! சிறப்பம்சங்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.