ETV Bharat / state

ரூ.10 கோடி பத்திரமாக மாறிய தங்கநகைகள்! - இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

author img

By

Published : Jun 15, 2022, 6:24 PM IST

தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்கிய முதலமைச்சர்!
தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்கிய முதலமைச்சர்!

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூன் 15) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உள்ள பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பீட்டிலான தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 10 ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், திருக்கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதியரசர்கள் தலைமையில் தனிக்குழு: மேலும் இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, திருக்கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக பெற்று வங்கியில் முதலீடு செய்தல் பணிக்காக தமிழ்நாட்டின் சென்னை பகுதி, திருச்சி பகுதி மற்றும் மதுரை பகுதி ஆகிய மூன்று பகுதிகளில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதன்படி, சென்னை மண்டலம் - திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜு தலைமையிலும், திருச்சி மண்டலம் - சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் க.ரவிச்சந்திர பாபு தலைமையிலும், மதுரை மண்டலம் – இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஆர். மாலா தலைமையிலும், குழுக்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தை 13.10.2021 அன்று முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு: மேலும் நீதியரசர் தலைமையில் பிரித்தெடுக்கும் பணி முடிக்கப்பட்டு 27 கிலோ 250 கிராம் (27250.500 கிராம்) எடையுள்ள பலமாற்றுப்பொன் இனங்கள் 1.4.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச் சென்று, அதனை உருக்கி சுத்த தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்டு சாத்தூர் கிளை பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி தங்க முதலீட்டுப் பத்திரத்தை முதலமைச்சர் இன்று இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயிலின் திருப்பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க முதலீட்டுப் பத்திரத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்கிய முதலமைச்சர்

இதையும் படிங்க: திருச்செந்தூரில் விரைவில் மெகா திட்டப் பணிகள் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.