ETV Bharat / city

திருச்செந்தூரில் விரைவில் மெகா திட்டப் பணிகள் - அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : Jun 14, 2022, 11:00 PM IST

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் மெகா திட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய திருக்கோயிலுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூன் 14) வருகை தந்தார். ரூ.300 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் மெகா திட்டப் பணிகள் குறித்தும், பல்வேறு கோயில் நலத்திட்டங்கள் குறித்தும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக அவர் கலந்தாய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சாமி தரிசனம்: பின்னர், 30 கோடி ரூபாய் மதிப்பில் திருச்செந்தூரில் நடந்துவரும் யாத்திரை நிவாஸ் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் விடுதி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, நான்கு பேட்டரி கார்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கிவைத்த அவர், தொடர்ந்து பேட்டரி கார்களில் பயணித்து தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து , கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "வெளி மாநிலங்களின் பல்வேறு கோயில்களுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பக்தர்களின் தேவைகளை கேட்டறிந்து உள்ளோம். ஓரிரு மாதங்களில் மெகா திட்டம் பணிகள் தொடங்கும்.

12 கோயில்களில் திருவிளக்கு பூஜை: பல்வேறு கோயில் திருப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். திருச்செந்தூரில் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். சட்டப்பேரவையில் அறிவித்த 12 திருக்கோயிலில் இன்று மாலை 108 பெண்கள் கலந்துகொள்ளும் திருவிளக்கு பூஜை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மெகா திட்ட பணிக்கு தனியார் நிறுவனம் (HCL) 175 கோடி ரூபாயும் பங்களிக்கிறது. முழு திட்ட மதிப்பீடு தொகை முடிவு செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறையும், பொதுமக்களின் பங்களிப்போடும் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும். வரும் காலங்களில் எந்த ஒரு குறையும் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். யாத்ரி நிவாஸ் திட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலை துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: வெள்ளாயி கோபுரம் சொல்லும் கதை..! - சிறப்பான வரலாற்றுத்தொகுப்பு - ஈடிவி பாரத் நேயர்களுக்காக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.