ETV Bharat / state

தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 7:32 PM IST

தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். - முதல்வர் ஸ்டாலின்
tamilnadu-industrial-department-function-cm-stalin-speech

Naan Mudhalvan Scheme: அமெரிக்க நிறுவனமான UPS நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி கடிதத்தை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: சென்னை போரூரில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று (ஆக.28) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமெரிக்க நிறுவனமான UPS (United Parcel Service) நிறுவனத்தின் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். மேலும், தொழில்நுட்ப மையத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கான கடிதத்தை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கினார்.

பின் நிகழ்ச்சி மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மாநிலத்தில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு 2023 மார்ச் மாதம் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் பல்முனையப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், தொழிற்சாலைகள் நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டத்திலும் பல்முனையச் சரக்குப் போக்குவரத்துப் பூங்கா அமையவுள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தொழில் துறையில் மாற்றங்கள் கொண்டு வர தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலகங்கள் மற்றும் இளைஞர்களை தயார்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மாணவர்களும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள பயிற்சிகள் அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜீஸ் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்களைத் (Government ITI) தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நமது இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் (TIDCO) இணைந்து மூன்று புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systems) உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையமும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமென்ஸ் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையமும், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில் புத்தாக்க மையங்கள் (Industrial Innovation Centre) அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி வாய்ப்புகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த மையங்கள் மூலம் 47 ஆயிரம் நபர்களுக்கு உயர்தர திறன் மிகுந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் உள்ள GCC-க்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அண்மையில் வெளியிடப்பட்ட குஷ்மேன் & வேக்ஃபீல்ட் அறிக்கையின்படி, பொறியியல் பட்டதாரிகளின் இருப்பு, வணிகம் புரிவதற்கும், வாழ்வதற்கும் நிலவும் எளிதான சூழல் மற்றும் நல்ல நிர்வாகம் போன்ற காரணிகளால் இந்தியாவிலேயே GCC-க்களுக்கான முதல் 2ஆம் அடுக்கு நகரமாக கோயம்புத்தூர் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, 2022-2023ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 14 லட்சத்து 53 ஆயிரத்து 321 கோடி ரூபாயாகும். வளர்ச்சி விகிதத்தில் இது 8.19 விழுக்காடாகும். 2021-2022ஆம் ஆண்டில், நடப்பு விலைகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிரா முதலிடத்தையும், தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

2021-2022 மற்றும் 2022-2023இல் அகில இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 விழுக்காடு மற்றும் 8.82 விழுக்காடாக இருந்த நிலையில், தமிழ்நாட்டின் பணவீக்க குறியீடு 2021-2022இல் 7.92 விழுக்காடாகவும், 2022-2023இல் 5.97 விழுக்காடாகவும் குறைந்துள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது புள்ளிவிபரம் மட்டுமல்ல, இந்த ஆட்சிக்கு கிடைத்த நற்பெயர்.

தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என கூறினார். இந்த நிகழ்ச்சியில், தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், UPS நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர் பால சுப்ரமணியன், தலைமை மனித வள அலுவலர் டேரல் ஃபோர்டு, இந்தியாவிற்கான துணைத் தலைவர் சுப்ரமணி ராமகிருஷ்ணன், சென்னை தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பி. ஸ்ரீராம், கேரியர் டெவலப்மண்ட் மையத்தின் முதல்வர் டாக்டர் பாலமுரளி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தஞ்சையில் களைகட்டிய 75ஆம் ஆண்டு காவிரிப் பொங்கல் திருவிழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.