ETV Bharat / state

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வலது கையை இழந்ததா 1½ வயது குழந்தை? - நடவடிக்கை என்ன?

author img

By

Published : Jul 2, 2023, 9:03 PM IST

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதற்கு மருத்துவமனை செவிலியர்கள் தான் காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றம் - வேதனையில் பெற்றோர்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கை பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒன்றரை வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்த சிகிச்சையில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஏற்கனவே அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது ஒன்றரை வயது மகன் முகமது மகிருக்கு, தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைகாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதித்து உள்ளனர்.

அங்கு, குழந்தையின் வலது கையில் ட்ரிப்ஸ் போட்டுள்ளனர். மேலும், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர். ட்ரீப்ஸ் போடப்பட்ட இடத்தில் கறுப்பாக மாறியதாக கூறப்படுகிறது. பின், வலதுகை முட்டி பகுதி வரை செயலிழந்ததுடன், கறுப்பாகவும் மாறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பரிசோதனை செய்த மருத்துவர்கள் வலது கையை அகற்ற வேண்டும் என கூறி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வலது கையை முழுவதுமாக அகற்றி உள்ளனர்.

குழந்தையின் தந்தை தஸ்தகீர் கூறும்போது, "குழந்தைக்கு ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்து வருகிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ட்ரிப்ஸ் போடப்பட்ட பிறகு, கை கறுப்பாக மாறியது. மருத்துவர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கையின் நிலை மோசமானதால், மருத்துவர் ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்தார்.

அது,மருத்துவமனையில் இல்லை என்றதால் வெளியே இருந்து வாங்கி வந்து பயன்படுத்தியும் பயன் இல்லை. தற்போது கையை அகற்ற வேண்டும் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கையை அகற்றி உள்ளனர்" என தெரிவித்தார்.

குழந்தையின் தாய் அஜிஷா கூறும்போது, "சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்திருந்தோம். அங்கு கடந்த வியாழக்கிழமை குழந்தையின் வலது கையில் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்ட ஊசி (டிரிப்ஸ்) செலுத்திய போது குழந்தையின் கையின் விரல் பகுதியில் சிகப்பு நிறமாக மாறியது.

இது குறித்து அங்கு இருந்த செவிலியரிடம் தெரிவித்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து குழந்தையின் கையிலேயே அந்த ஊசி இருந்தது (டிரிப்ஸ் ) பலமுறை வலியுறுத்தியும் அதனை அகற்றவில்லை. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால் வேறு வழி இல்லாமல் வேறு ஒரு செவிலியரிடம் தெரிவித்து அந்த ஊசியை அகற்றினேன்.

அதற்குள்ளாக குழந்தையின் பாதி கை அளவுக்கு சிகப்பு நிறமாக மாறி கை அசைவின்றி இருந்தது. அதன் பிறகு குழந்தையின் கை கருப்பு நிறமாக மாறி அசைவின்றி இருந்தது குறித்து இரவு மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆயின்மென்ட் போட்டால் சரியாகிவிடும் என்று தெரிவித்தனர்.

பின்னர் சனிக்கிழமை வரை அங்கேயே இருந்தும் எனது மகனின் கையில் அசைவு இல்லாததால் மீண்டும் மருத்துவரிடம் தெரிவித்தேன். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்த போது தான் எனது மகளின் கை அழுகிவிட்டது என தெரிவித்தனர். உடனடியாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் குழந்தையை காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்தனர்.

ஆனால் எனது குழந்தையின் கை அழுகியதற்கு யார் பொறுப்பு, யார் காரணம் என்று சொல்லவில்லை. குழந்தைக்கு ஏற்கனவே இருந்த பாதிப்பு காரணமாக இப்படி ஏற்பட்டிருக்கலாம், அப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் குழந்தைக்கு கையில் செலுத்தப்பட்ட ஊசியினால் பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டு கை அழுகி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனது குழந்தை கையில் போடப்பட்ட ஊசியால் பாக்டீரியா பாதிப்பு ஏற்படும் போது ஆரம்பத்திலேயே தாயாக இருந்து செவிலியரிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் அவர் மிகவும் அலட்சியப் போக்காகவே இருந்தார். மருத்துவமனையில் சரியாக மருத்துவர்கள் வார்டுக்கு வருவதில்லை.

மூத்த மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் காலையில் ஒரு முறை வந்து பார்த்துவிட்டு சென்றாள் பின்னர் வருவதில்லை. ஆனால், என்னை பொறுத்தவரையில் அங்கிருந்து செவிலியர்கள் மருத்துவர்கள் அலட்சியப் போக்கு தான் எனது குழந்தையின் கை பாதிக்கப்பட்டதற்கு காரணம். பின்னர் சனிக்கிழமை இரவு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம்.

இங்கு எனது குழந்தையின் வலது கையை முழுமையாக அகற்றி விட்டனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு எனது குழந்தையின் கையை எடுக்க காரணமாக இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக இதுவரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் இது போன்று அலட்சியமான போக்குடன் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அணுகுகிறார்கள். அச்சப்பட்டு கொண்டு மக்கள் பலர் வெளியே சொல்லாமல் உள்ளனர்.

தமிழ்நாடு அரசு தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு மூன்று நாட்களுக்கு பிறகு தான் விசாரணையை முடிக்கும் என்று கூறுகிறார்கள். ஒரே நாளில் அந்த விசாரணை நடத்தி யார் தவறு செய்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது குழந்தைக்காக தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னையில் வந்து தங்கி மருத்துவமனையில் கடந்த ஓர் ஆண்டாக சிகிச்சையில் இருந்து வருகிறோம். ஆனால் எனது குழந்தையின் கை இப்படி பாதிக்கப்பட்டது வேதனையாக உள்ளது. கை இல்லாமல் எனது குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

என்னைப் போல் இனிமேல் எந்த ஒரு பெற்றோரும் குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" என தெரிவித்தார். இது குறித்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரத்தைச் சேர்ந்த 1.5 வயது குழந்தை முகமது மகீர், குறை பிரசவத்தில் 1.5 கிலோ எடையுடன் பிறந்தது.

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை

அந்த குழந்தைக்கு தீவிர Hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. அதற்காக ஐந்து மாதத்தில் நீர் கசிவை உறிஞ்சு எடுக்க VP shunt எனும் சிகிச்சை வழங்கப்பட்டது. தீவிர ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்திறன் குறைபாடும் கொண்டிருந்தது அந்த குழந்தை.

நீர் கசிவை உறிஞ்சுவதற்காக பொருத்தப்பட்ட VP shunt ஆசனவாய் மூலம் வெளியே வந்து விட்டதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அது அகற்றப்பட்டது. ஐந்து நாட்கள் முன் புதிய shunt பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பு குழந்தைக்கு வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது. சீரிய முயற்சிகள் எடுத்த போது வலது கை முழுவதும் பரவியதால் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

உடனே பல்வேறு நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழு குழந்தைக்கு இன்று (ஜூலை 02) எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தது. மயக்கவியல் நிபுணர் தனசேகரன், உதவி பேராசிரியர் விக்னேஷ், மருத்துவர் ரேகா, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர் சங்கரபாரதி, உதவி பேராசிரியர் கற்பக விநாயகம், உள்ளிட்டோர் கொண்ட குழு அறுவை சிகிச்சை செய்து, குழ்ந்தை தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

மருத்துவத்துறை அமைச்சர் உத்தரவுக்கு இணங்க, விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது, அதன் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறது - முதலமைச்சர் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.