ETV Bharat / state

சென்னை சென்ட்ரல் அமைதியான ரயில் நிலையமாக மாறியது - தென்னக ரயில்வே

author img

By

Published : Feb 28, 2023, 6:02 PM IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனிமே டிஜிட்டல் தொழில்நுட்பம்தான்..!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனிமே டிஜிட்டல் தொழில்நுட்பம்தான்..!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை: 150 வருட பழமையான டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிறு (பிப்.26) அன்று அமைதியாக காட்சியளித்ததாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் ஒலிபெருக்கியில் தகவல் தெரிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு தெரிவிக்கப்படுகிறது.

ரயில் எண், நடைமேடை எண் போன்ற தகவல்களும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் இதில் குழப்பம் உள்ள மக்களுக்கு உதவியாக, மையங்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பல மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தகவல்கள் தெரிவிக்கும் விதமாக டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பின்பற்றப்படுவதுபோல ரயில் நிலையங்களிலும் ரயிலின் தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நுழைவாயில்களிலும் (எம்டிசி பஸ் நிறுத்தம், வால் டாக்ஸ் சாலை மற்றும் புறநகர் முனையம்) இந்த டிஜிட்டல் திரை வைக்கப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களுக்கு வழக்கம்போல ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடர்ந்து அளிக்கப்படும் எனவும்; வெளியூர் செல்லும் ரயில்களுக்கு மட்டுமே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

விளம்பரங்களும் இனிமேல் ஒலிபெருக்கியில் இடம்பெறாது எனவும்; கண் பார்வையற்றோருக்கு ப்ரெயிலி மேப்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் தோன்றும் வீடியோவில் ரயில் குறித்த தகவல்கள் சைகை மொழியில் அவர்களுக்கு விளக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதற்காலிக செயல்முறை திட்டம் மட்டுமே, மக்களின் வரவேற்பை பொறுத்தே நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வருவது குறித்தும், மற்ற ரயில் நிலையங்களில் விரிவுபடுத்துவது குறித்தும் முடிவெடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காஷ்மீர் பண்டிட் கொலையில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.