ETV Bharat / state

புற்றுநோய்க்கு உடனடி அறுவை சிகிச்சை தேவையில்லை - சுப்பையா சண்முகம்

author img

By

Published : Jun 1, 2020, 7:57 PM IST

சென்னை: புற்றுநோயாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் சிகிச்சையளித்து வரும் முறை குறித்து ராயப்பேட்டை புற்றுநோய் சிகிச்சை மையத்தின் அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் சுப்பையா சண்முகம் விரிவாக தெரிவித்துள்ளார்.

shanmugam
shanmugam

இதுதொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு சிக்கலான தருணத்தை கடந்து கொண்டிருக்கிறோம். 1918ஆம் ஆண்டு, முதல் உலகப் போருக்குப் பின்னர் பரவிய "ஸ்பானிஷ் ஃப்ளூ" என்ற தொற்றுநோய் பாதிப்பு மக்களின் உயிரைக் குடித்தது. அதேபோன்று தற்போது, 100 ஆண்டுகள் கடந்து கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

பொது ஊரடங்கு அறிவித்ததால் சில இன்னல்கள் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்கவில்லை. புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனாவை கருத்தில் கொண்டு மாற்று வழிகளில் சிகிச்சையளித்து வருகிறோம். அறுவைச் சிகிச்சை, ரேடியோதெரபி, கீமோ தெரபி போன்றவற்றிற்கு எந்த அளவில் மாற்று வழியில் சிகிச்சை அளிக்க முடியுமோ அதனை பயன்படுத்தி சிகிச்சையளித்து வருகிறோம்.

புற்றுநோய் சிகிச்சை மையங்களில் புற்றுநோய்க்கு மூன்று வகையான முறையில் சிகிச்சையளித்து வருகிறோம்.

1) கரோனா வைரஸ் பரவலின் போது 15 நாள்கள் ஒரே இடத்தில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதில் சில சவால்கள் உள்ளன. எனவே அதனை குறைக்கும் வகையில் சில மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய கூடியவர்களுக்கு அதற்கேற்ப ஒத்தி வைத்துள்ளோம்.

2) உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்றவை இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.

3) கரோனா வைரஸ் காலத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு வழிமுறைகளையும் நாங்கள் வகுத்துள்ளோம். இதன் மூலம் கரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் நோயாளிகளுக்கு இல்லை என்பதை முழுவதும் உறுதி செய்த பின்னரே அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம்.

குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முன் நெஞ்சகப் பகுதியில் எக்ஸ்-ரே எடுப்போம். இதன் மூலம் அவருக்கு கரோனா நோய் தொற்று உள்ளதை எளிதாகக் கண்டறிய முடியும். பின்னர் அரசின் ஆர்டிபிசி ஆர் பரிசோதனை செய்து பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோம். ஊரடங்கு காலத்தில் 60 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதுவரை யாருக்கும் நோய்த்தொற்று ஏற்படவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸை எதிர்த்துப் போராடும் போது, பாதிப்புகள் இல்லை எனக் கூற முடியாது. பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான். போர்க்காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் என்பது நன்றாக தெரியும்.

தற்போது, கரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் போர் போன்றதாக அமைந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டியது மருத்துவர்களின் தலையாய கடமை. அதே நேரத்தில் அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை இரண்டு வாரம் தள்ளிப் போடுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. நோய்க்கு ரேடியோ தெரபி, கீமோதெரபி, அறுவை சிகிச்சை போன்றவற்றில் எந்த சிகிச்சை அளிப்பதென்பது அவர்கள் வரும் தூரத்தை, நோயின் தன்மையை பொறுத்து முடிவு செய்யலாம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அவர்களுக்கு தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாம் புற்றுநோயை விட, கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் உள்ளோம் என்பதை புரிந்து கொண்டால் சிகிச்சை எளிதாக அளிக்க முடியும். புற்றுநோய் சிகிச்சைக்காக மாதம் தோறும் தொடர் கண்காணிப்புக்கு வருபவர்களை மருத்துவமனையில் உள்ள கால் சென்டர் மூலம் தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இறப்புகளை கணக்கில் கொண்டால் நாம் அனுபவித்து வரும் இன்னல்கள் என்பதில் சகித்துக் கொள்ளக் கூடியது எனலாம்.

ராயப்பேட்டையில் உள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்திற்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சிகிச்சைக்கு வருவார்கள். ஆனால், தற்போது போக்குவரத்து இல்லாததால் ராயப்பேட்டை புற்றுநோய் சிகிச்சை மையத்தில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள் மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் செயல்பட்டு வரும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையங்களில் பணியில் உள்ளனர். அவர்களின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சையளிக்க அறிவுறுத்தி வருகிறோம்.

அனைத்து நோயாளிகளையும் மாஸ்க் போட சொல்லி அறிவுறுத்துவதுடன், தனிமனித இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முன்கூட்டியே கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்கி கூறுகிறோம். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் இருக்கும். தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் முகக்கவசம் அணிதல் போன்ற அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'இந்தியாவுடன் சேர்ந்து சீனாவை சமாளிப்போம்' - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.