ETV Bharat / state

Flat வாங்கப் போறீங்களா? - இதைப்படிங்க முதலில்..! கட்டட தரத்தை உறுதி செய்வது எப்படி? சட்டத்தீர்வு என்ன?

author img

By

Published : Aug 9, 2023, 10:27 PM IST

How to Check flat before buying it: சென்னையில் கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே இடிந்து விழும் அடுக்குமாடி குடியிருப்பில், அச்சத்துடன் வசித்து வருகின்றனர் பொதுமக்கள். பணம் கொடுத்து வாங்கிய வீட்டினுள் நிம்மதி இழந்து வசித்து வரும் நிலையில், குடியிருப்புகள் வாங்கும் முன்னரே சிந்திக்க வேண்டியது என்ன, சோதிக்க வேண்டியது என்னவென்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

சென்னையில் ’மாவீரன்’ பட பாணியில் இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2011ஆம் ஆண்டு "ஜெயின் வெஸ்ட் மின்ஸ்டர்" என்ற பெயரில் அடுக்குமாடி கட்டுவதற்கான அனுமதி CMDA-வால் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சாலிகிராமம் பகுதி என்பதால் கட்டுமானப் பணிகள் தொடங்கியது முதலே அந்த தனியார் நிறுவனத்திடம் மக்கள் தங்களுக்கான வீடுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

முழுமையாக கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்தின் சார்பில் சி.எம்.டி.ஏ மூலமாக சான்றிதழும் பெறப்பட்டது. 4.65 ஏக்கர் நிலத்தில் 17 அடுக்குமாடி என மொத்தம் 630 வீடுகள் கட்டு முடிக்கப்பட்டு அதில் 490 வீடுகளில் மட்டும் மக்கள் 2015ஆம் ஆண்டிலிருந்து குடியேறத் தொடங்கினர். ஆனால், மக்களின் பொது பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் வணிகப் பயன்பாட்டிற்கு விடவே இது தொடர்பாக அப்போதே புகார் எழுந்ததால் அந்த கட்டடத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதற்குப் பின் அந்த தனியார் நிறுவனம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சீலை அகற்றியுள்ளது சி.எம்.டி.ஏ. ஆனால் கட்டுமான நிறுவனம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் அந்த கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் அதே வளாகத்தில் இருக்கும் பல வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சு அவ்வப்போது இடிந்து விழுகிறது. சுவர்களில் விரிசல், தூண்களில் விரிசல் என பாதுகாப்பற்ற சூழலில் தாங்கள் வசித்து வருவதாகவும் அங்கு உள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்
இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்

மக்களின் கேள்வியும் எதிர்பார்ப்பும்: சென்னையில் மிக முக்கியமான இடத்தில் தனியார் கட்டட நிறுவனம் இந்த கட்டடத்தை கட்டியுள்ளனர். அப்படி இருக்கும்போது கட்டடத்தின் பணிகள் முடிந்த பிறகு கட்டடத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை சி.எம்.டி.ஏ அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா? அப்படி செய்திருந்தால் கட்டடத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை அப்போதே அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும்.

மக்கள் புழக்கத்தில் ஒரு வாசகம் உண்டு "குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து வீடு வாங்கினோம்" இதே வாசகத்தை தான் பாதிப்படைந்த வீட்டில் வசிக்கும் நபரும் நம்மிடம் கூறினார். ’’வங்கியில் கடன் வாங்கி, தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோரிடமும் வட்டிக்கு வாங்கி வாங்கின வீடு சார். இது அப்படி இருக்கும் போது என்னுடைய வீடு இப்படி சேதமடைந்து விரிசல் விடுவதையும், மேற்கூரை இடிந்து விழுவதையும் பார்க்க முடியவில்லை’’ என அங்கு சொந்த வீடு வாங்கிய நபர் கண்ணீரோடு தெரிவிக்கிறார்.

இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்
இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள்

தனியார் நிறுவனத்திடம் இரண்டு கோரிக்கை மட்டும் வைப்பதாக கூறுகிறார், சேதமடைந்த வீட்டின் உரிமையாளர். இதுவரை நாங்கள் எங்களுடைய சேதமடைந்து வீட்டிற்குச் செலவு செய்த தொகையை எங்களுக்கு வழங்க வேண்டும். இனிமேல் வீட்டிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம் சீரமைத்துத் தர வேண்டும் என இந்த இரண்டு கோரிக்கையை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை தனியார் கட்டட நிறுவனம் நிறைவேற்றுவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

சேதமடைந்த வீடு குறித்து பில்டர்ஸ் அசோசியேஷன் விளக்கமும் பின்னணியும்: builders association of India State secretary ராம பிரபு இதுகுறித்து கூறுகையில், “ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது தண்ணீரின் தரம், கட்டடம் கட்டுவதற்கு வாங்கப்படுகின்ற இடு பொருட்களின் தரம், மணல் மற்றும் சிமென்ட் தரம் என அனைத்துமே சரி பார்த்திருக்க வேண்டும். இந்த கட்டடத்தின் பின்னணியில் அவைகள் சரி பார்க்கபட்டதா எனத் தெரியவில்லை. மேலும் மக்கள் இனி வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியது "RERA"-(REAL ESTATE REGULATORY AUTHORITY) எண் இருக்கிறதா என்பதைச் சரி பார்க்க வேண்டும்” என்கிறார்.

இந்த சட்டம் கூறுவது ஒரு கட்டடம் கட்டும் முன் அந்த கட்டடத்தின் குறிப்பிட்ட சில தகவல்கள் கட்டாயமாக இதில் பதிவு செய்யபட்டிருக்க வேண்டும். இதன் மூலம் வீடு வாங்குவோர் முழுமையான நம்பகத் தன்மையுடன் வாங்கலாம் எனவும், ஒரு வேலை மக்கள் தாங்கள் வாங்கிய கட்டடத்தில் சேதம் இருந்தால் உடனே இந்தச் சட்டத்தின் வாயிலாக வீடு விற்பனை அல்லது கட்டிக் கொடுத்த அந்த தனியார் கட்டட நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடரலாம் எனவும் அவர் கூறினார்.

சட்டரீதியாக இந்த விவகாரத்தை அணுகுவது குறித்து வல்லுநர்கள் கூறுவது என்ன? சட்ட வல்லுநர் விஜயன் ''ஏற்கனவே தமிழ்நாட்டில் ”RERA” சட்டம் 2016 முதல் இருந்து வருகிறது. இந்த சட்டத்தின் மூலமாக இது போன்ற வழக்குகளை எளிதில் கையாள முடியும். ஆனாலும் இந்தச் சட்டத்திலும் பல குளறுபடிகள் உள்ளதாகவும், அவைகளை களைந்து சட்டங்கள் கடுமையாக கொண்டு வர வேண்டும்.

அதே போல, ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் அதிகபட்ச ஆயுட்காலம் 60 முதல் 75 ஆண்டுகள் இதனை உறுதி செய்யும் வகையில் கட்டடம் கட்டி முடித்தபின் கட்டடத்தின் தரம் எப்படி இருக்கிறது என முறையாக ஆய்வு செய்யும் வகையிலான சட்டத்தை ”RERA” மூலமாக கொண்டு வர வேண்டும். அப்படி இல்லையெனில் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்” என எச்சரிக்கை விடுக்கிறார்.

இரை தேடி வெளியே செல்லும் பறவைக்கு கூடுதான் வீடு. அதே போல வாழ்க்கையின் பல்வேறு ஓட்டங்களை முடித்து விட்டு நிம்மதியாக வாழ மனிதன் வரும் இடம் தான் வீடு. ஒருவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தி காட்டுவதிலும் ஒரு வீடு என்பது முக்கியப் பங்கு வகிக்கின்றது. அப்படிப்பட்ட விஷயத்தில் சுய லாபம் பார்க்காமல் வரும் காலத்திலாவது தனியார் கட்டட நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க: பி.இ.,பி.டெக் படிப்புகளுக்கான முதல் கலந்தாய்வின் முடிவுகள் வெளியீடு: 193 கல்லூரியில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.