ETV Bharat / state

"அண்ணாமலை தான் இதயக்கனி, அதிமுகவினருக்கு பொறாமை" - சொல்கிறார் கரு.நாகராஜன்

author img

By

Published : Jun 13, 2023, 6:35 PM IST

Updated : Jun 13, 2023, 8:10 PM IST

அண்ணாமலை எதிரான அதிமுக தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், அண்ணாமலையை விமர்சிக்க அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தகுதியில்லை என்றும் பாஜகவின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அண்ணாமலையை பற்றி விமர்சனங்களுக்கு கரு.நாகராஜன் கண்டனம்
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அண்ணாமலையை பற்றி விமர்சனங்களுக்கு கரு.நாகராஜன் கண்டனம்

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் அண்ணாமலையை பற்றி விமர்சனங்களுக்கு கரு.நாகராஜன் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் 1991-96 காலகட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனியார் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். இதற்கு, பாஜகவின் மாநில தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்றும் பாஜகவின் தேசிய தலைமை அண்ணாமலையை கண்டிக்காவிட்டால் கூட்டணி மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அதிமுக ஒரு ஆலமரம், பாஜக ஒரு செடி என்றும் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக பதில் விமர்சனம் செய்திருந்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனத்திற்கு பதிலளித்த பாஜகவின் துணைத் தலைவர் கரு.நாகராஜன், "அண்ணாமலை ஆங்கில பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியை ஒழுங்காக படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றிக் கொண்டிருக்கிறார். கூட்டணி என்பது எல்லோரும் இணைந்தது தான். பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது. அண்ணாமலை பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. 19 கோடி உறுப்பினர் கொண்ட இயக்கத்தை செடி என்று சொல்வதா?" என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரத்தினால் அதிமுக, பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள் தற்போது கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பொதுவெளியில் எவ்விதமான அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் அற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் தரக்குறைவாக, உள்நோக்கத்துடன் விமர்சனம் செய்துள்ளனர். தமிழக மக்களிடையே மாற்றம் தரும் தலைவர் அண்ணாமலை. அவரைப் பற்றி விமர்சனம் செய்ய முன்னாள் அமைச்சர்களுக்கு எந்தவித தகுதியும் இல்லை. தெர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம் ஆகியோர் பேசுவதை அவர்களிடமே மீண்டும் கேட்டால் அதனை சொல்ல தெரியாது.‌ தமிழ்நாடு மக்களின் இதயக்கனி அண்ணாமலை.

பா.ஜ.க. என்பது ஒரே கட்சி தான். பா.ஜ.க.வுக்கு கட்சி பதவியை காட்டிலும் மக்கள் சேவை தான் முக்கியம். அண்ணாமலை மீது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு பொறாமை. அ.தி.மு.க கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சரியாக பேச வேண்டும். இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர்களை கண்டிப்பார் என நினைத்தேன். ஆனால் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை நாங்கள் வியப்புடன் பார்த்துள்ளோம். இதை கடுமையாக எதிர்க்கிறோம். ஜெயலலிதா மீது அனைவருக்கும் மரியாதை உள்ளது. ஜெயலலிதா பெயரை வைத்து தான் அ.தி.மு.க அரசியல் செய்கிறது. எடப்பாடி சிறந்த பண்பாளர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த போது அண்ணாமலை உள்ளிட்ட அனைவரும் ஒன்றாக தான் இருந்தார்கள். கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாரும் செய்யக்கூடாது. தி.மு.க.வுக்கு அ.தி.மு.க வாய்ப்பு அளிக்கிறது. சி‌.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. ஓ.பி.எஸ் என்னவெல்லாம் பேசட்டும். ஜெயலலிதாவை வைத்து அரசியல் செய்கிறார். அனைவரும் திருந்தினால் மட்டுமே இந்தப் பிரச்சினை தீரும். அகில இந்திய அளவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக தான் தலைமை தாங்கும். எங்களால் தான் 66 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை என்பது அவர்களது பணி” எனக் கூறினார்.

இதையும் படிங்க: AIADMK vs BJP: திமுகவின் ஏஜண்டாக அண்ணாமலை செயல்படுகிறார் - சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

Last Updated : Jun 13, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.