ETV Bharat / state

இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை; ஆலோசனை கூட்டத்தில் முடிவு என தகவல்

author img

By

Published : Jan 31, 2023, 8:05 PM IST

CHE
CHE

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடப்போவதில்லை என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் போட்டியிடுகிறது.

தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுவதால், பாஜகவும் போட்டியிட முனைப்பு காட்டியது. இது தொடர்பாக ஆலோசிக்க 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக நியமித்தது. இதனிடையே அதிமுக சார்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியினர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.

ஆதரவு நிலைப்பாடு குறித்து தேசிய தலைமையிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதிமுகவில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இரு அணிகளில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்பது குறித்து பாஜக குழப்பத்தில் இருந்தது.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என பாஜக முடிவு செய்துள்ளதாகவும், அதிமுகவில் இரட்டை இலை சின்னம் உள்ளவர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம், இல்லையெனில் தனித்துப் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். தற்போது பாஜக போட்டியில்லை என்ற முடிவை எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடைபெறாது - மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் பாஜகவினர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.