ETV Bharat / state

பக்ரீத் பண்டிகை: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

author img

By

Published : Jul 9, 2022, 4:43 PM IST

Updated : Jul 9, 2022, 5:13 PM IST

பக்ரீத் பண்டிகை: அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!
பக்ரீத் பண்டிகை: அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்துள்ளனர்.

சென்னை: ஹஜ் பெருநாள் என அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று (ஜூலை 9) உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்: தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும், என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருப்பார்கள் என்ற உயரிய தத்துவத்தை பறை சாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடவிருக்கும், எனது அருமை இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி: தியாகத்திலே பிறந்து தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளைப் போற்றி பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பக்ரீத் திருநாளை கொண்டாடுவது இஸ்லாமியர்களாக இருக்கலாம்; ஆனால், பக்ரீத் திருநாள் சொல்லும் செய்தி அனைவருக்குமானது தான். பக்ரீத் திருநாளை முன்வைத்து இஸ்லாம் சொல்லும் செய்தியைத் தான் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு மதங்கள் கூறுகின்றன. அனைத்து மதங்களும் சொல்லும் செய்தி அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்; இல்லாதவர்களுக்கு உதவுங்கள் என்பது தான்.

இந்தப் பாடத்தை புரிந்து நடந்தாலே உலகில் அமைதியும், சகோதரத்துவமும் தழைக்கும். அதன்படி அன்பு, நல்லிணக்கம், ஈகை, மாற்றுத்திறனாளிகள் மீதான அக்கறை என்றும் நீடிக்க வேண்டும்; நல்ல மனம் கொண்ட மக்களுக்கு எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

மதிமுக: தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும். இந்த உணர்வையும், உறவையும் மேலும் செழித்தோங்கச் செய்யச் சூளுரைத்து, இஸ்லாமியப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் இதய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: ராமதாஸ், அன்புமணி மீதான வழக்குகள் தள்ளுபடி!

Last Updated :Jul 9, 2022, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.