ETV Bharat / state

தேனியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டு புகார் அளிக்க வந்த ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 2:22 PM IST

Updated : Dec 5, 2023, 3:07 PM IST

auto-driver-suicide-attempted-in-front-of-theni-collectorate-office
பூச்சி மருந்தை உட்கொண்டு புகார் அளிக்க வந்த ஆட்டோ ஓட்டுநர் ! காரணம் என்ன?

Theni news: தேனியில் தீப்பற்றி எரிந்த தனது ஆட்டோவிற்கு, மாதத் தவணை செலுத்த சொல்லி மிரட்டுவதாகக் கூறி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டு மனு அளிக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டு புகார் அளிக்க வந்த ஆட்டோ ஓட்டுநரால் பரபரப்பு

தேனி: பொம்மையகவுண்டன்பட்டி, பாலன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர், கடந்த வருடம் தனியார் ஷோரும் ஒன்றில், ஆட்டோவை தவணை முறையில் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, பயணிகளுடன் ஆட்டோ சவாரி செய்து கொண்டிருக்கும்போது திடீரென ஆட்டோவில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் பதறிப்போன கண்ணன் ஆட்டோவை நிறுத்தி, என்னவென்று பார்க்கலாம் என இறங்கியபோது மளமளவென தீ பற்றி எரிந்து, ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.

இதனையடுத்து, தான் ஆட்டோ வாங்கிய ஷோரூமிற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி, தனது வாகனத்திற்கு காப்பீடு தொகை வழங்குமாறு கண்ணன் கேட்டுள்ளார். அதற்கு உரிய பதில்களை அளிக்காமல், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமதித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டி தனது அன்றாட பிழைப்பை நடத்தி வந்த கண்ணன், கடந்த நான்கு மாதங்களுக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமல், மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே தீப்பற்றி எரிந்த தனது வாகனத்திற்கு, மாதத் தவணை செலுத்தச் சொல்லி பைனான்ஸ் நிறுவனம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் வரை தவறாமல் மாதத் தவணை செலுத்தி வந்த நிலையில், ஆட்டோ இல்லாமல் தன்னால் மாதத் தவணை செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். இதனால் மனமுடைந்த கண்ணன், இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் தெரிவிப்பதற்காக வந்திருந்தார்.

அப்போது அவரை விசாரித்த காவல்துறையினர், கண்ணன் தற்கொலைக்கு முயற்சி செய்துவிட்டு புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து கண்ணன் கூறுகையில் "எனது ஆட்டோவிற்கு காப்பீடு தொகையை பெற்றுத் தரவேண்டும். என்னை மிரட்டி வந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மிசோரமில் தோல்வியைச் சந்தித்த துணை முதலமைச்சர்..! ஆட்சியைக் கைப்பற்றுகிறதா சோரம் மக்கள் இயக்கம்..!

Last Updated :Dec 5, 2023, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.