ETV Bharat / state

என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்காதது ஜனநாயகப் படுகொலை - அன்புமணி ராமதாஸ்

author img

By

Published : Aug 16, 2023, 5:07 PM IST

Etv Bharat
Etv Bharat

NLC: என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்காதது ஜனநாயகப் படுகொலை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய விடுதலை நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டங்களின்போது, கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெய்வேலி மூன்றாவது நிலக்கரி சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், கத்தாழை, கரிவெட்டி, வீரமுடையாநத்தம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மூன்றாவது சுரங்கத் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். பல இடங்களில் காவல் துறையினரைக் கொண்டு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதைக் கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர். கிராமசபைகளில் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும்.

கிராம மக்களுக்கு அவர்களின் தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் கிராமசபைகள் உருவாக்கப்பட்டன. கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்புகள் என்று காந்தி கூறினார். அந்த கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும். இந்திய அளவில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் உள்ள அதிகாரத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபைகளுக்கும் உண்டு.

அந்த அதிகாரத்தைப் பறிக்க எந்த அதிகாரிக்கும் உரிமை இல்லை. கிராமசபை கூட்டங்களில் மக்கள் தங்களின் தேவை மற்றும் உரிமைகள் குறித்து தீர்மானம் இயற்றுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. அதிகாரிகளின் செயலால் மக்களுக்கு அரசியல் சட்ட உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும். ஆனால், அதை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என்று தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால், அதே தன்னாட்சி அதிகாரத்தை கிராமசபைகளுக்கு வழங்க மறுப்பதும், உரிமைக்காக குரல் கொடுக்கும் பொதுமக்களுக்கு எதிராக காவல் துறையினரைக் கொண்டு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதும் எந்த வகையில் நியாயம்? இது என்ன வகையான ஜனநாயகம்?

  • கிராமசபைக் கூட்டத்தில் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை: தடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த ஆணையிட வேண்டும்!

    இந்திய விடுதலை நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தப்பட்ட கிராம சபைக்…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், கிராமசபை கூட்டங்களில் மதுக்கடைகளை மூடுவது உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற மக்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறு நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது.

அத்தகைய தீர்ப்புக்கு எதிராக என்எல்சி சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறி தீர்மானம் இயற்ற அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள் என்றால், அவர்கள் யாருடைய கைப்பாவைகளாக செயல்படுகிறார்கள்? இது தொடர்பாக விசாரணை நடத்த அரசு ஆணையிடுவதுடன், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பாமக சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடலூர் மாவட்டத்தில் எந்தெந்த கிராமசபைகளில் எல்லாம் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் மீண்டும் கிராமசபைக் கூட்டத்தை உடனடியாக நடத்த அரசு ஆணையிட எடுக்க வேண்டும். அந்தக் கூட்டங்களில் மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் முன்மொழியும் தீர்மானங்களை மக்கள் ஆதரவின் அடிப்படையில் நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சுதந்திர தினம்: மாணவர்களுக்கு சொந்த செலவில் மிதிவண்டி வழங்கிய ஊராட்சி தலைவர்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.