பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கும் 'அமுல்' - ஆவினுக்கு ஆபத்தா?

author img

By

Published : May 23, 2023, 7:30 PM IST

dairy

அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பால் வரத்து குறைவாக இருக்கும் நிலையில், அமுலின் நுழைவு ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 4.30 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டுமில்லாமல் தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற பால் பொருள்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தாலும், இதுவரை ஆவின் நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதலில் தீவிரமாக ஈடுபடவுள்ளது. அமுல் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, பால் முகவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பால் கொள்முதலில் ஈடுபட்டது. இந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் பால் கொள்முதலில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பால் கொள்முதல் நிலையங்களை அமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட மாவட்டங்களில் அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமுலின் தயாரிப்புகளான நெய், மில்க் ஷேக் மற்றும் ஐஸ்கிரீம்களுக்கு மாநிலம் முழுவதும் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த சூழலில், விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனம் முகவர்களை நியமிக்கலாம் என தெரிகிறது. வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல அமுல் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பால் கொள்முதலுக்கு ஆவின் நிறுவனம் வழங்கும் விலையை விட லிட்டருக்கு ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என்றும், பால் வழங்குவதற்கான பணம் விவசாயிகளுக்கு ஓரிரு நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் அமுல் நிறுவனம் உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆவினுக்கு ஆபத்து!

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் நுழைந்தால் ஆவின் நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக பால் முகவர்கள் மற்றும் பணியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "அமுல் நிறுவனம் தமிழ்நாட்டிற்குள் வந்தால், ஆவின் நிறுவனத்தைப் போலவே கூட்டுறவு சங்கத்தை நிறுவிதான் பால் கொள்முதல் செய்யும். ஆவினின் அதே கட்டமைப்பைப் பின்பற்றும். அதேபோல், விவசாயி வழங்கும் பாலுக்கான சரியான தரத்திற்கு விலை கிடைக்கும். உடனடியாகவும் தொகை கையில் வரும். அதனால், விவசாயிகளுக்கு அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுப்பது லாபமாக இருக்கலாம். அதனால், ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் விவசாயிகள் அமுல் நிறுவனத்திற்கு செல்லலாம்.

விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைக்கலாம்- ஆனால், இது ஆவின் நிறுவனத்துக்கு ஆபத்தாக முடியும். இதனால், ஆவினுக்கு பால் வரத்து, பால் கொள்முதல் குறையக்கூடும். இதனால், ஆவின் நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. அதேபோல், அமுல் நிறுவனத்திடம் ஆவின் நிறுவனம் சரண்டர் ஆனாலும் ஆச்சரியம் இல்லை" என்று கூறினார். ஆனால், தற்போதுள்ள சட்டத்தின்படி, அமுல் நிறுவனத்தால் தமிழ்நாட்டில் பால் கூட்டுறவு சங்கத்தை அமைக்க முடியாது என்று ஆவின் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க:"கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்" : திமுக-வை ரைமிங்கில் விமர்சித்த ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.