"கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்" : திமுக-வை ரைமிங்கில் விமர்சித்த ஈபிஎஸ்

author img

By

Published : May 23, 2023, 5:18 PM IST

முதலமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து ஈபிஎஸ் விமர்சனம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று சுற்றுபயணம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இந்த வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாயில் வடை சுடும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளிநாடு சென்று எந்த முதலீட்டை ஈர்த்து வந்தார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், புதிய திட்டங்களையும் தொடங்காமல், "கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்' செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்றும்; விடியா அரசின் அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன், 'குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட "யாதும் ஊரே" உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதனால் தமிழகத்திற்கு கிடைக்கப்பெற்ற பயன்கள் குறித்து பட்டியலிட்டுள்ளார்.

அதில், கடந்த 2015-ல் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்போது சுமார் 2.42 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறு குறு மற்றும் நடுத்தரத் துறை சார்பாக ரூ.16,532 கோடி மதிப்பிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியின் இறுதியில் சுமார் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டில் இருந்தது என்றும்; இதன்படி Saint Gobain, Samsung, Apollo Tyres விரிவாக்கம், MRF, TVS Motors விரிவாக்கம், Kone Elevators, Microsoft, Growth Link Overseas, சியட் டயர் நிறுவனம், ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தைவான் நாட்டைச் சேர்ந்த லோட்டஸ் புட் வேர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைத் துவக்கி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியிலேயே வெளி நாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்பட்டதாகவும், இதனால் பல ஆயிரம் மக்களுக்கு வேலை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக நலனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா செல்வதையே வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : 'உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காகத் தான் சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறேன்' - முதலமைச்சர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.