ETV Bharat / state

கொங்குவை குறி வைக்கும் திமுக

author img

By

Published : Jul 11, 2021, 3:00 PM IST

Updated : Jul 11, 2021, 3:50 PM IST

கொங்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்தில் ஐக்கியமாவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், அதிமுகவினர் என ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கோவை தெற்குத் தொகுதியை குறிவைத்து நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தை ஜம்மு - காஷ்மீரை பிரித்ததுபோல் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக புரளியை கிளப்பினர்.

கொங்கு மண்டலத்தில் பலவீனமாக உள்ள திமுக, அதன் கட்சி அமைப்பை அங்கு வலுப்படுத்தும் நோக்கில் அப்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையான சமுதாயத்தினர், மாற்றுக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் பின்வருமாறு

மகேந்திரன்

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் ஜூலை 8ஆம் தேதி திமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலத்தில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டிருக்கலாம். வருங்காலத்தில் நிச்சயம் திமுகவின் கோட்டையாக மாறும் என ஆரூடம் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த மகேந்திரன்
திமுகவில் இணைந்த மகேந்திரன்

கோவையில் மிகுந்த செல்வாக்கு மிக்க மகேந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதிக வாக்குகளை பெற்றவர் ஆவார். தொடர்ந்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் கமலுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியியைச் சேர்ந்தவராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

தோப்பு வெங்கடாசலம்

இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைந்தார். அவருடன் 900க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

தோப்பு வெங்கடாச்சலம்
தோப்பு வெங்கடாச்சலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். கடந்த 2011ஆம் ஆண்டு பெருந்துறையில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு அவர் மீண்டும் பெருந்துறையில் வென்றாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

மேலும் அவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இதனயடுத்து, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர், இன்று திமுகவில் இணைந்தார். எனவே ஈரோட்டில் திமுகவின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூரை தன்வசமாக்கிய திமுக

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது அதிரடி நடவடிக்கைகளால் அப்பகுதி மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணையும் அதிமுகவினர்
செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் இணையும் அதிமுகவினர்

சட்டப்பேரவை தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக தன் வசமாக்கியதற்கு முக்கியக் காரணமாக விளங்கிய செந்தில் பாலாஜியைப் பின்பற்றி முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் உள்பட பலரும் தற்போதுவரை திமுகவில் இணைந்து வருகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் இருந்து மாற்றுக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அறிவாலயத்தில் தொடர்ந்து ஐக்கியமாவது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனவே வரும் காலங்களில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் கை ஓங்கும் என திமுகவினர் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கொங்கு நாட்டுக்கு குறி: திமுகவில் ஐக்கியமாகும் தோப்பு வெங்கடாசலம்

Last Updated :Jul 11, 2021, 3:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.