ETV Bharat / state

மனித இனப்பெருக்க கட்டமைப்பை ஒட்டுமொத்தமாக சீர் குலைக்கிறதா காற்று மாசு.? நிபுணர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 6:21 PM IST

காற்று மாசுபாட்டால் பெண்கள் கருவுருவதில் பிரச்னையா
காற்று மாசுபாட்டால் பெண்கள் கருவுருவதில் பிரச்னையா

Air pollution causes fertility problems in women: மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் சுவாசப் பிரச்னை மட்டுமல்ல இனப்பெருக்க கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.

சென்னை: நாகரீகம் என்ற பெயரில் இயற்கையில் இருந்து பிரிந்து நெடுந்தூரம் சென்று கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள், நேர மேலாண்மை, உபயோகிக்கும் பொருட்கள், கொண்டாடும் பண்டிகைகள் என அனைத்திலும் அதிக அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தியும், ஏற்றுக்கொண்டும் பயணித்து வருகிறோம்.

நவீன உலகில் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே சில சமயங்களில் மறந்து சமூகம் இழுக்கும் பக்கமெல்லாம் அதன் போக்கில் நாமும் சென்று கொண்டிருக்கிறோம். நம் பெற்றோர் காலத்தில் பயன்படுத்திய மஞ்சப்பையும், தூக்குச் சட்டிகளும் இப்போது நாகரீகமற்றதாக நமக்குத் தெரிகிறது.

பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்து அவற்றைப் பயன்படுத்தி , அதிலும் தரம் குறைந்த எளிதில் மக்காத பிளாஸ்டிக் வகைகளைத் தான் அதிகம் புழங்குகிறோம். அதனை உபயோகித்து விட்டுச் சரியான முறையில் மறு சுழற்சியும் செய்வதில்லை. இவை மண்ணில் புதைந்து மண்ணை மாசுபடுத்துகிறது. சிலர் பொறுப்புணர்ச்சியோடு இருப்பதாக எண்ணி இந்த பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து விடுவதும் உண்டு. இதனால் காற்று மாசும் ஏற்படுகிறது.

தினம் உபயோகிக்கும் பொருட்களால் மட்டுமல்ல, வருடம் ஒரு முறை வரும் பண்டிகைகளும் காற்றை அதிக அளவில் மாசுபடுத்துகிறது. உறவுகளுடன் இனிப்பையும், உணவுகளையும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டாடிய பண்டிகைகள் தற்போது பட்டாசுகளால் காற்று மாசுபாடுகளையும், உடல்நல கோளாறுகளையும் பகிர்ந்து கொள்ளும் பண்டிகைகளாக மாற்றியுள்ளோம்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நாம் வாங்கி வெடிக்கும் பட்டாசுகளால் ஏற்படும் அந்த காற்று மாசு பலரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அதிகமாகப் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் காற்று மாசுபாட்டால் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் மதியம் 2.5 மணிக்குக் காற்று மாசின் அளவு 500 ஆகவும், அதே போல் இரவு 10 மணிக்கு 459 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் கார்பன் மோனாக்சைடு (CO) 85 ஆகவும் NO2 57 ஆகவும் இருந்தது. இந்நிலையில் காலை 9 மணியளவில் காற்றின் தரம் 'திருப்திகரமான' நிலைகளில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board) தெரிவித்தது.

காற்று மாசுபாட்டால் கரு வளர்ச்சியில் ஆபத்து: தேசிய தலைநகர் பகுதிகளில் ஏற்படும் இந்த காற்று மாசு நெருக்கடிக்கு மத்தியில் கர்ப்பிணிகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக மாசுபாட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்வேதா வசீர் கூறியுள்ளார்.

இந்த மாசுபட்ட காற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரு வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், இதனால் குறை எடை மற்றும் குறைப்பிரசவம் போன்ற பிரச்னைகளுக்கு பங்களிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த தொடர் மாசு வெளிப்பாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதற்றத்தின் அளவை அதிகரித்து அவர்களது மன நலனை பாதிப்பதாக வசீர் கூறியுள்ளார். அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்பானது இந்த பிரச்னைகளை சரி செய்தாலும், கர்ப்ப காலத்தில் இதனால் ஏற்படும் தொற்று நோய்களின் ஆபத்து அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.

ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கிடும் காற்று மாசு: சுற்றுச்சூழல் சுகாதார முன்னோக்குகள் எனும் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சில மாசுபடுத்திகள் அனோஜெனிட்டல் தூரத்தை, அதாவது மகப்பேறுக்கு முந்தைய ஹார்மோன்களின் வெளிப்பாட்டின் அளவில் எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் ஆரம்பகால குழந்தை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் காற்று மாசுபாடு இயல்பான ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கிடலாம் என்று கூறுகின்றனர். இந்த இடையூறு இனப்பெருக்க ஆரோக்கியத்தில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

காற்று மாசுபாடு ஒரு முக்கிய பொது சுகாதார பிரச்னையாகும். அபாயகரமான காற்றின் தரம் குறிப்பிடத்தக்க சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துகிறது, ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சிக்கல்களின் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

இருப்பினும், குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் மகப்பேறு காலத்தில் இருக்கும் பெண்கள் தான் இந்த அபாயகரமான காற்று மாசுபாட்டின் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கிறதா? - கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறும் அறிவுரை

மாசுபாட்டிற்குள் ஊடுருவும் நஞ்சுக்கொடி: தாயை கருவுடன் இணைக்கும் உறுப்பான நஞ்சுக்கொடியானது, காற்று மாசுபாட்டிற்குள் ஊடுருவக்கூடியது எனவும், வளரும் கருவானது சுற்றுச்சூழல் நச்சுகளின் விளைவுகளுக்கு அதிகமாக பாதிக்கப்படக்கூடியது என மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின் ஆலோசகர் டாக்டர் பிரியங்கா சுஹாக் கூறியுள்ளார்.

கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு, குறைப்பிரசவம், குறைந்த பிறப்பு எடை, பிறவி இதயக் குறைபாடுகள், ஆஸ்துமா மற்றும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு உள்ளிட்ட பல பாதகமான சுகாதார பாதிப்புகளுடன் தொடர்புடையது எனவும் அவர் கூறியுள்ளார்.

விந்தணுக்களின் தரத்தையும் பாதிக்கும் காற்று மாசு: தினசரி அதிக அளவிலான மாசுபாட்டிற்கு மத்தியில் இருப்பது கருவுறுதல் அளவு குறைவதற்கு முக்கியமான காரணமாகும் எனவும், இது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மட்டுமின்றி ஆண்களின் விந்தணுக்களின் தரத்தையும் பாதிக்கும் என இன்ஃபினைட் ஃபெர்ட்டிலிட்டியின் மருத்துவ இயக்குனர் நிஷா பட்நாகர் கூறியுள்ளார்.

மேலும், காற்றின் தரம் மோசமடைவது சுவாச ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகளிடையே பாலியல் உந்துதலைக் குறைப்பதாகவும், ஈஸ்ட்ரோஜெனிக் மற்றும் ஆன்டிஆண்ட்ரோஜெனிக் பொருட்கள் கொண்ட காற்றின் வெளிப்பாடு டெஸ்டோஸ்டிரோன் மற்றும் விந்தணு உற்பத்தியை பாதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்கள், ஆண்கள் என இருவரின் கருவுறுதலிலும் காற்று மாசுபாடு பிரச்னையை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட காற்றில் உள்ள நச்சுகள் ஹார்மோன் சமநிலையை சீர்குலைத்து, இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

உங்கள் கருவுறுதலைப் பாதுகாக்க:

  • காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் காலங்களில் வெளியில் செல்வதை கட்டுப்படுத்தவும்
  • அதிக மாசு நிறைந்த பகுதிகளில் முகமூடிகளை அணியவும்
  • சமச்சீர் உணவை கடைபிடிக்கவும்
  • வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்
  • ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்க மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்
  • மன அழுத்த நிவாரணத்திற்காக கர்பகாலத்தில் செய்யக்கூடிய யோகா மற்றும் தியானத்தை மேற்கொள்ளவும்

இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால காற்று மாசுபாட்டில் இருந்து கர்பிணிகள் தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை மற்றும் சரியான நேரத்தில் தலையிடுதல் ஆகியவை இனப்பெருக்க நல்வாழ்வுக்கான வழிகளாகும் என," மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ ஆலோசகர் டாக்டர் லாவி சோதி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாழ்க்கையில் முன்னேறிய செல்வந்தர்களின் 7 ரகசிய குணம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.