ETV Bharat / state

பணிச்சுமையால் அவதிப்படும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - ஒன்றிணைந்து போராட ஐபெட்டோ அண்ணாமலை அழைப்பு!

author img

By

Published : Jul 26, 2023, 7:41 PM IST

AIFETO
பணிச்சுமை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருப்பதாகவும், தன்னார்வலர்கள் ஆசிரியர்களை கேள்வி கேட்கும் அவலம் இருப்பதாகவும் ஐபெட்டோ மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்த பணிச்சுமையிலிருந்து விடுவிக்கக்கோரி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை: ஐபெட்டோ எனப்படும் தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூலை 26) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிச்சுமை காரணமாக தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். கற்பித்தலைக் கடந்து, மாணவர்களின் உயரம், எடை உள்ளிட்டவற்றை அளவு எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அதுவும் ஓராசிரியர் பள்ளிகளாக இருந்தால், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பணித்திறன் பயிற்சி என்று வரும்போது, 1, 2, 3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் செல்ல வேண்டும், 4, 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கும் அந்த ஆசிரியரே செல்ல வேண்டும். அதேபோல், 6, 7, 8 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் தனித்தனியாக பள்ளி வேலை நாளில் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும்.

எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்கள் துணைக் கருவிகளை தயாரிப்பதிலேயே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். மாதம்தோறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனை பார்வையிட தொண்டு நிறுவனங்களின் சிறப்பு கருத்தாளர்கள் இருப்பார்கள்.

தன்னார்வலர்கள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆசிரியர்களை கேள்வி கேட்கலாம் என்ற நிலைமையில்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக 40 முதல் 45 வயது வரை உள்ள பெண் ஆசிரியர்கள் பலர் விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். ஏற்கனவே பாதிபேர் பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலால் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர்.

கரோனா காலத்தை விட மோசமான காலம் தற்போது கல்வித்துறையில் நிலவுகிறது. இதில்தான் ஆசிரியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அரசாங்கம் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பல பணிகளை கொடுத்து கல்விப் பணிகளைக் கெடுக்கக்கூடாது, பணிச்சுமைகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்.

இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் காக்க அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும், பணிச்சுமையில் இருந்து விடுதலை பெறும்வரை நமது குரல் களத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். ஒன்றணைந்து போராட ஆசிரியர்கள் அனைவரையும் அழைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியானது; 11ஆம் வகுப்பு முடிவுகள் 28ஆம் தேதி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.