ETV Bharat / state

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு

author img

By

Published : Dec 1, 2021, 10:32 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி - ஜெயக்குமார் மனு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக்கோரி - ஜெயக்குமார் மனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி, மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவைப் பரிசீலித்து அதனை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இப்போது நகர்ப்புற உள்ளாட்சியில் உள்ள, 15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஊரக உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக்கோரி, அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் விளைவாக அனைத்து வாக்குச் சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்த போதும், ஆளுங்கட்சிக்குச் சாதகமான வகையில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

காரணமின்றி அதிமுகவினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

குறிப்பாக, உரியக் காரணமின்றி அதிமுகவினரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்தல் அலுவலர்களோடு அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நடத்தி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப்பட்டதாகவும், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் கடைசிவரை முன்னிலையிலிருந்த இடங்களில் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறி

மேலும், இந்த விதிமீறல்களால் மாநில தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இது தொடர்பாகக் கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஆளுநரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

இதனையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஜனவரி 2022க்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்பதால், ஊரக உள்ளாட்சித் தேர்தலைப் போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிடக் கூடாதெனக் கருதிக் கடந்த நவம்பர் 1ஆம் தேதி அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு அலுவலர்களை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும்

தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், "உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அலுவலர்களை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிக்க மத்திய அரசு அலுவலர்கள் அல்லது வெளிமாநிலத்தைச் சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது ரிசர்வ் படையைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது

மேலும், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006-2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாகவும், உயர் நீதிமன்றம் தலையிட்டு ஒரு வார்டின் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து, அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.