ETV Bharat / state

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் அச்சமின்றி விண்ணப்பிக்கலாம்

author img

By

Published : Mar 1, 2023, 8:04 AM IST

உயர்கல்வியில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழ்ங்குவதாகவும், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்த்து விட்டு மாணவர்கள் அச்சமில்லாமல் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு எந்தவித அச்சமின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கு தேவையான கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து உயர்கல்விக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கு உதவித்தொகை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு வரை கல்வி நிறுவனங்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்களுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கும் வகையில் இணையதளத்தை மாற்றி அமைத்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறு விண்ணப்பிக்கும் போது, மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமி பிரியா கூறும்போது, 'ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகைக்கான இணையதளம் 2023 ஜனவரி 30 அன்று திறக்கப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி வரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். மேலும், மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்நோக்கப்படுகிறது.

இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023ஆம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e-KYC முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணைக்கொண்டு ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பெறப்பட்ட சாதிசான்று, வருமானச்சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு, மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு (Aadhaar seeded to bank Account) கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ (Demo Video) பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், கல்வி உதவித்தொகை இணையதளத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட (Aadhaar Seeding) வங்கி கணக்கு விவரங்களே எடுத்துக்கொள்ளப்படும் என்பதினால், கல்வி உதவித்தொகை விண்ணபிப்பதற்கு முன்னர், மாணவர்கள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா? (Mapped) என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பிழை ஏதேனும் இருப்பின், அந்தப் பிழையினை மாணவர் அளவிலேயே சரி செய்ய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும், எனவே இது தொடர்பாக அச்சமின்றியும், பிழையின்றியும் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளித்த ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.