ETV Bharat / state

’சங்கரய்யாவிற்கு கொடுத்த விருதை எனக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்’ - கமல்ஹாசன்

author img

By

Published : Jul 28, 2021, 6:18 PM IST

kamal
kamal

சென்னை: ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா தொடர்பான தனது கருத்துகளை கேட்க அழைத்த ஒன்றிய அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக, நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2019ஆம் ஆண்டு பிப்ரவர் 12ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எழுந்த எதிர்ப்பையடுத்து நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021ஆம் ஆண்டில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த சட்டத் திருத்தத்தின்படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான படங்களுக்கு மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. இந்த மசோதாவை எதிர்த்து திரைப்படத் துறையினர் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரைப்படக் கலைஞர்கள் இணைய வழியில் ஆலோசனையும் நடத்தினர்.

இந்தநிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குறித்து திரையுலகினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜூலை.27) தனது கருத்தை தெரிவிக்க கமல் ஹாசன் டெல்லி சென்றார்.

கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து டெல்லியில் இருந்து இன்று (ஜூலை.28) சென்னை விமானநிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “டெல்லியில் ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா குறித்து தந்த மனு பற்றி வெளியே சொல்ல அனுமதி இல்லை. இருந்தாலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் எனத் தெரிந்தும் அந்தக் கருத்தை சொல்வதற்காக அழைத்த ஒன்றிய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சு சுதந்திரத்தைப் போல் சிந்தனை சுதந்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. திமுகவைக் கண்டித்து அதிமுக போராட்டம் நடத்துவது தொடக்க காலம் முதல் செய்கின்ற வேலை.

உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகிக் கொண்டுள்ளது. இதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். சங்கரய்யாவிற்கு தந்த விருதை எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். தமிழ்நாடு மக்களுக்கும் தோழர்களுக்கும் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

மூன்று மாத திமுக ஆட்சியை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்” என்றார். தொடர்ந்து, மக்கள் நீதி மைய்யத்தில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருவது குறித்து கேள்விக்கு பதில் அளிக்காமல் கமல்ஹாசன் திரும்பினார்.

இதையும் படிங்க:ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா: கருத்து தெரிவிக்கும் கமல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.