ETV Bharat / state

500 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து வேறு நிறுவனத்திற்கு விற்று மோசடி! ஒருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 6:25 PM IST

Chennai Crime New
விருகம்பாக்கத்தில் மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்து வேறு நிறுவனத்தில் விற்று மோசடி செய்த நபர் கைது

Chennai Crime News: சென்னை விருகம்பாக்கத்தில் மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்துச் சென்று வேறு ஒரு நிறுவனத்திடம் விற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை: விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா (வயது 43). இவர் தனது வீட்டு வளாகத்தில் டெக்னிக்கல் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மடிக்கணினிகளை பல்வேறு நிறுவனங்களுக்கு வாடகை விடும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, தினேஷ் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தினேஷ் லிங்கம் என்பவர் பிரேமலதா நிறுவனத்தில் இருந்து 496 மடிக்கணினிகளை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இதற்காக ரூ.21 லட்சம் வாடகைப் பணம் தர வேண்டி இருந்த நிலையில், தினேஷ் லிங்கம் அந்த வாடகை பணத்தை தராமலும், மடிக்கணினிகளை திருப்பித் தராமலும் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து மோசடி செய்து உள்ளதாக பிரேமலதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தினேஷ் லிங்கம் என்பவர் பிரேமலதா நிறுவனத்தில் இருந்து எடுத்துச் சென்ற 496 மடிக்கணினிகளில், 57 மடிக்கணினிகளை திரும்ப ஒப்படைத்து உள்ள நிலையில் மீதமுள்ள மடிக்கணினிகளை தராமலும், அதற்கு உண்டான வாடகைப் பணத்தை தராமல் மடிக்கணினிகளை மற்ற நிறுவனங்களில் விற்பனை செய்து மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தினேஷ் லிங்கத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்தவரை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 312 மடிக்கணினிகள், கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: சபர்மதி ஆற்றில் உலகக் கோப்பையுடன் போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.