ETV Bharat / state

அமெரிக்க விசா பெற போலிச் சான்றிதழ் தயார் செய்து கொடுத்த ஆந்திர நபர் சென்னையில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 7:13 PM IST

Fake Certificate
விசா பெற போலிச் சான்றிதழ் தயார் செய்து கொடுத்த ஆந்திராவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது

Fake Certificate: அமெரிக்க துணை தூதரகத்தில் விசா பெறுவதற்காக போலி மதிப்பெண் சான்றிதழ் தயார் செய்து கொடுத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நபர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹேம்நாத் (வயது 24) தனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல விசா கேட்டு சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் விண்ணப்பித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்கத் துணை தூதரகத்தில் நேர்முகத் தேர்விற்காக ஹேம்நாத் சென்னை வந்துள்ளார்.

அப்போது அவரது ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரிகள் ஹேம்நாத் தாக்கல் செய்த பி.டெக் சான்றிதழ்கள் போலியானது எனக் கண்டுபிடித்தனர். இது குறித்து அமெரிக்கத் துணை தூதரக அதிகாரிகள் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மாணவன் ஹேம்நாத்தைப் பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டை பிரகாஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் போலி மதிப்பெண் சான்றிதழ்களைத் தயார் செய்து கொடுத்ததாகத் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் துணை ஆணையர் செந்தில்குமாரி மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நரசராவ் பேட்டைக்குச் சென்று ஹரிபாபு(35) என்ற நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், ஹரிபாபு பட்டப் படிப்பை முடித்துவிட்டு மும்பையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர மாநிலமான சொந்த ஊரிலே ECCHO overseas consultancy என்ற பெயரில் அலுவலகம் ஒன்று தொடங்கி நடத்தி வந்ததாகவும், இந்த அலுவலகம் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்குப் போலியான கல்விச் சான்றிதழ் தயார் செய்து விற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஹரிபாபு அலுவலகத்தில் சோதனை செய்து கம்ப்யூட்டர்கள், ஹார்டிஸ்க், ரூ.2 லட்சம் பணம், பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

பின்னர், ஹரிபாபு மீது வழக்குப்பதிவு செய்து எத்தனை நபர்களுக்கு இதுபோன்று போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயார் செய்து கொடுத்தார் என மேல் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உலக மீனவர் தினம்: மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் படும் இன்னல்கள், அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.