ETV Bharat / state

2 மாதங்களாக வயிற்றில் இருந்த 8 கி கட்டி!.. வெற்றிகரமாக நீக்கிய ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 11:03 PM IST

8 Kg tumor removed from stomach
ராயப்பேட்டை அரசு மருத்துவர்கள் சாதனை

8 Kg tumor removed from stomach: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், நோயாளி வயிற்றில் இருந்த 8 கிலோ பெரிய கட்டியை 4.5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

சென்னை: தாம்பரத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தாங்க முடியாத வயிற்று வலியால் 2 மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 10ஆம் தேதி அன்று வலி மற்றும் வீக்கத்துடன், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்ததும், அது 30cm X 20cm அளவிற்கு ஒரு கட்டி வளர்ந்து இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பெரிய கட்டிதான் அந்த நபருக்கு வயிற்று வலி ஏற்பட காரணமாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு, CT ஸ்கேன் செய்ததில் கல்லீரலுக்குக் கீழே ஒரு பெரிய கட்டி இருப்பதைக் காட்டி இருப்பதும், அது சிறுகுடலின் வலதுபுறத்தில் தள்ளியும், பெருங்குடலுடன் ஒட்டிக்கொண்டும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் குழுவினர், 4.5 மணி நேர அறுவை சிகிச்சை செய்து அக்கட்டியை நீக்கினர்.

இது குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் டீன் ஆர்.முத்துசெல்வன் கூறுகையில், "இக்கட்டியின் அளவு மிகவும் பெரியதாக இருந்ததால், வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதுமான இடம் இல்லாமல் இருந்தது. இதனால், சிகிச்சை மிகவும் சவாலாக அமைந்தது. இருப்பினும், கட்டியை முக்கியமான ரத்த நாளங்கள் மற்றும் உறுப்புகளுக்கும் சேதமில்லாமல் பாதுகாப்பாக அகற்றி வெற்றிப்பெற்றது.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் புற்றுநோயியல் மையம், மகளிர் மருத்துவம், தலை மற்றும் கழுத்து, மார்பகம், தசைக்கூட்டு மற்றும் இரைப்பை குடல் புற்றுநோய்கள் உள்ளிட்டவைகள் இங்கு முக்கியமாக கையாளப்படுகிறது.

இந்த மையத்தில் 2014ஆம் ஆண்டு முதல் நோயாளிகளின் நலனுக்காக மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகளையும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வகை அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டு, 60 ஆக இருந்த நிலையில், இந்த வருடம் 861 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் நல்வாழ்வை மேம்படுத்த, மருத்துவமனையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், புற்றுநோயியல் துறையின் தலைவர் எஸ்.சுப்பையா தலைமையில், மருத்துவர்கள் ஜெகதீஷ் சிங், விஜயலக்ஷ்மி மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் பிரணாப் நிர்மல், பால் பிரவீன் மற்றும் அபிநயா ஆகியோருடன், செவிலியர் ஷாமிலி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நோயாளி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 'இந்தியா கூட்டணி மகளிர் மாநாடு'.. கனிமொழி தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்.. முதலமைச்சர் நேரில் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.