ETV Bharat / state

சென்னையில் 'இந்தியா கூட்டணி மகளிர் மாநாடு'.. கனிமொழி தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம்.. முதலமைச்சர் நேரில் ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 8:30 PM IST

சென்னையில் ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி மகளிர் அணிகள்
சென்னையில் ஒன்றுகூடும் இந்தியா கூட்டணி மகளிர் அணிகள்

Women's Rights Conference: திமுக மகளிரணி சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி நடத்தும் "மகளிர் உரிமை மாநாடு" நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பெண் தலைவர்கள் சென்னை வரவுள்ளனர்.

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பெண் தலைவர்கள் அனைவரும் நாளை (அக்.14) சென்னையில் நடக்கவிருக்கும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அவர் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதி முதல் இந்த ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் என்பதால், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகின்றன.

இந்த நூற்றாண்டு விழாவிற்காக, திமுகவின் ஒவ்வொரு அணிகளின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், இப்போது திமுக மகளிரணி சார்பில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி.கனிமொழி நடத்தும் "மகளிர் உரிமை மாநாடு", நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

சோனியா காந்தி சென்னை வருகை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இந்த மாநாட்டில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வருகிறார். எனவே தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன. சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் ஒரே விமானத்தில், இன்று (அக்.13) இரவு 10:40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்கள்.

இவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்பார். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உடன் இருப்பார். இதனைத் தொடர்ந்து, அவர்கள் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்க உள்ளனர். பின்னர், நாளை (அக்-14) காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமரும், சோனியா காந்தி கனவருமான ராஜீவ் காந்தி நினைவகத்திற்கு செல்விருப்தகாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக காங்கிரஸ் கமிட்டி உடன் ஆலோசனை: இதனைத் தொடர்ந்து நாளை காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழக அரசியல் களத்தை இந்திய கூட்டணி எப்படி செயல்படுத்தப் போகிறது என்பது குறித்த முக்கிய ஆலோசனை நடைபெறும் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாநாடு: இந்த மாநாட்டில் முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே திரிணமூல், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயல் உறுப்பினரான டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிட்லன் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தும் மிக முக்கியமான மாநாடாக இது பார்க்கபடுகிறது. இந்த மாநாட்டில், மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெறும் என்றும் திமுக மகளிரணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை.. இஸ்ரேல் வாழ் இந்தியர் ஈடிவி பாரத்திற்கு பகிர்ந்த பரபரப்பு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.