ETV Bharat / state

vinayagar chaturthi: விநாயகர் சதுர்த்தி எதிரொலி... தமிழக டிஜிபி கொடுத்த முக்கிய அட்வைஸ்! என்ன தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 11:05 AM IST

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 74 ஆயிரம் போலீசார்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 74 ஆயிரம் போலீசார்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை : விநாயகர் சதுர்த்திக்கு செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. ஆனால், செப்டம்பர் 18 அன்று தான் விநாயகர் சதுர்த்தி என பல்வேறு தரப்பினர் பொது விடுமுறை தினத்தை மாற்றக் கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்ததை அடுத்து செப்டம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் 74 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். அதே போல் காவல் துறையினரிடம் அனுமதி பெற்று பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டிய அறிவுரையின்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அந்தந்த காவல் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும்போது, யாரும் அங்கு நடனம் ஆடவோ, கூச்சலிடவோ கூடாது எனவும், அரசியல் கட்சி, சாதி, மதம், சமூகம் உள்ளிட்டவை குறிப்பிட்டு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் பாடல்கள் ஒலிக்கவும் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

விநாயகர் சிலை அமைக்கும் இடங்களில் நில உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை உள்ளிட்டோரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தீயணைப்பு துறை, மின்வாரியத் துறை உள்ளிட்டோரிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவதுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விதிமுறைகளை பின்பற்றுவோம்ம் என உறுதிமொழி கடிதமும் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல் விநாயகர் சிலை அமைக்கும் இடங்களில் கூம்பு வடிவம் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு மாறாக செவ்வக வடிவ ஒளி பெருக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.