ETV Bharat / state

சென்னை ஏடிஎம் கொள்ளையில் கைதான 3 பல்கேரியர்கள் அவரது நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

author img

By

Published : Sep 15, 2022, 3:50 PM IST

சென்னை ஏடிஎம் கொள்ளையில் கைதான 3 பேர் பலத்த பாதுகாப்புடன் பல்கேரியா நாட்டிற்கு அனுப்பி வைப்பு
சென்னை ஏடிஎம் கொள்ளையில் கைதான 3 பேர் பலத்த பாதுகாப்புடன் பல்கேரியா நாட்டிற்கு அனுப்பி வைப்பு

சென்னை நகரில் நூதன முறையில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து கைதாகி, புழல் சிறையில் இருந்த பல்கேரிய நாட்டைச் சோ்ந்த கொள்ளையா்கள் 3 போ் பலத்த பாதுகாப்புடன் பல்கேரிய நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சென்னை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள ஏடிஎம்களில் ஒரு கும்பல் நூதனமான முறையில் போலி ஏடிஎம் காா்டுகளை பயன்படுத்தி ஸ்கிம்மா் முறையில் பணம் கொள்ளையடித்து வந்தனா்.

இதையடுத்து சென்னை மாநகரப்போலீசின் சிட்டி குற்றப்புலனாய்வுப்பிரிவு போலீசாா் தீவிர விசாரணை நடத்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஒ.எம்.ஆர் சாலையில் தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச்சோ்ந்த நிக்கோலா, போரீஸ், லூம் போப்பி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவா்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் காா்டுகள், லேப்டாப், இந்திய மற்றும் அமெரிக்க டாலா்களை பெருமளவு கைப்பற்றினா். அதன்பின்பு பல்கேரியா்கள் 3 பேரும் விசாரணைக் கைதிகளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் கடந்த 2019 டிசம்பரில் இவா்களுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனா்.

அதன்பின்பு 2021 ஆம் ஆண்டில், சென்னை நீதிமன்றம் ஏடிஎம் நூதன கொள்ளை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமிலிருந்த 3 பல்கேரியா்களும் மீண்டும் சென்னை புழல் சிறைக்கு தண்டனைக்கைதிகளாக மாற்றப்பட்டனா்.

இந்த நிலையில் பல்கேரியா நாட்டு அரசு இந்திய அரசிடம் பேசி, தங்கள் நாட்டு கைதிகளை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் அவர்களுடைய தண்டனை காலத்தை தங்கள் நாட்டில் சிறையில் அவர்கள் கழிப்பார்கள் என்றும் கூறியது. அதற்கு இந்திய அரசும் அனுமதி அளித்தது.

அதன்பெயரில் பல்கேரிய நாட்டில் இருந்து வந்த தனிப்படை போலீசார் முறைப்படி சென்னை புழல் சிறையில் அலுவலர்களிடம் முறையான அனுமதி பெற்றனா். அத்தோடு அவா்களை பல்கேரியா நாட்டிற்கு அழைத்துச்செல்ல குடியுரிமைப் பிரிவு அலுவலர்களிடமும் முறைப்படி அனுமதிபெற்று 3 பல்கேரியா்களுக்கும் எமா்ஜென்சி சா்டிபிகேட்கள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு பல்கேரியா்கள் 3 பேரையும் சென்னை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை சா்வதேச விமான நிலையம் கொண்டு வந்தனா். சென்னை சா்வதேச விமானநிலையத்தில் மருத்துவப்பரிசோதனை, குடியுரிமை, சுங்கச்சோதனைகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு பாதுகாப்புகளுடன் தனி இடத்தில் அமரவைக்கப்பட்டனர்.

இன்று அதிகாலை 4:30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கத்தார் நாட்டு வழியாக பல்கேரிய நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: காலாண்டு தேர்வுகள் தனித்தனி வினாத்தாள் மூலம் நடத்த முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.