ETV Bharat / state

செங்கல்பட்டு அருகே பவாரியா பாணியில் கொள்ளை.. கைவரிசை காட்டிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 4:45 PM IST

Etv Bharat
Etv Bharat

செங்கல்பட்டில் நள்ளிரவு வீடு புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், கத்தி முனையில் தம்பதியை மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தி முனையில் கொள்ளை

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருபவர் ஏழுமலை. இவருடைய மனைவி அம்பிகா பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்த தம்பதி நேற்று இரவு (அக்.13) செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வெங்கடாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், முகமூடி அணிந்துக் கொண்டு கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டின் பின்புற வாசல் வழியாக உள்ளே புகுந்ததாக தெரிகிறது.

முகமூடிக் கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை, அம்பிகா மற்றும் அவர்களது மகன், மகள் ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி, பீரோவில் இருந்த சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

ஏழுமலையின் மனைவி அம்பிகா கொள்ளையர்களை தடுக்க முயன்ற போது அவரைத் தள்ளி விட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் ஏழுமலையின் வீட்டில் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதோடு மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் பூட்டிய வீட்டில் 100 சவரன் தங்க நகை திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.