ETV Bharat / state

சென்னையில் பூட்டிய வீட்டில் 100 சவரன் தங்க நகை திருட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 6:48 AM IST

Etv Bharat
Etv Bharat

Chennai Crime: ஓட்டேரி அருகே பூட்டி இருந்த வீட்டில் 100 சவரன் தங்க நகை மற்றும் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: சென்னை ஓட்டேரி ஜமாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், ரஃபுதீன் திமிசுதீன் அகமது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். இரண்டு மகன்களில் ஒருவர் திருமணம் ஆகி ஜெர்மனி நாட்டில் வேலை செய்து வருகிறார். மேலும், மற்றொரு மகன் அதே நாட்டில் படித்து வருகிறார்.

மகள் திருமணமாகி கணவருடன் சவுதியில் வசித்து வருகிறார். எனவே, தம்பதி இருவரும் சென்னை ஓட்டேரி அருகே உள்ள ஜமாலியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள் ஓட்டேரி தாசமக்கான் ஸ்ட்ரான்ஸ் சாலையில் இருக்கும் வீட்டிலும் அடிக்கடி சென்று தங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அவரது மனைவி கடந்த வாரம் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளார். எனவே, திமிசுதீன் நேற்று இரவு தாசமகான் வீட்டிலிருந்து ஜமாலியா தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் இரும்பு கேட் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், இது குறித்து ஓட்டேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வீட்டை சோதனை செய்தபோது, பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகை மற்றும் 13 லட்சம் ரொக்க பணம் ஆகியவை பீரோவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையடித்த கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், கொள்ளை நடைபெற்ற வீட்டில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையடித்த மர்ம நபர்கள் எந்த பகுதியாக தப்பிச் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் 3,750 போதை மாத்திரைகள் பறிமுதல் - 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.